மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் போராட்டம் தொடர்கிறது

புதுடெல்லி: மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்றும் தொடர்கிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், விலைவாசி உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, அக்னிபாதை திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்த கோரி மக்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கூட்டத்தொடர் முழுவதும் நீக்கப்பட்டுள்ளனர். அதே போன்று மாநிலங்களவையில் திமுகவின் 6 எம்பிக்கள் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 19 எம்பிக்களும், காங்கிரசின் 4 மக்களவை எம்பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் மாநிலங்களவை கூடியதும், அவை விதிமுறை மீறி மைய பகுதிக்கு வந்து கோஷமிட்டதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் எண்ணிக்கை 20 ஆனது. இவர்கள், இன்றுவரை நாடாளுமன்ற வளாகத்திலேயே தங்கி 50 மணி நேர போராட்டத்தை நேற்று தொடங்கினர். அவர்கள், தங்களது கைகளில், எம்பிக்களை மோடி, அமித்ஷா ஆகியோர் சஸ்பெண்ட் செய்து விட்டனர் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி உள்ளனர். இதற்கிடையில் எம்பிக்கள் தங்களது தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்தால் சஸ்பெண்ட் உத்தரவு திரும்ப பெறப்படும் என்று என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் மன்னிப்பு கேட்டு சபைகளில் பதாகைகளை காட்ட மாட்டோம் என உறுதியளித்தால்தான் சஸ்பெண்ட் நடவடிக்கையை சபை தலைவர்கள் ரத்து செய்ய முடியும். கொரோனா பாதிப்பில் இருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டு வந்ததும் விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து விவாதிக்க தயார்’ என்றார். இதற்கு பதிலளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரைன், நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘டிவியில் எங்களுக்கு அட்வைஸ் செய்து வருகிறார். அமைச்சர் அவர்களே நீங்கள் உங்கள் வீட்டில் நன்றாக ஓய்வெடுங்கள்’ என கிண்டலடித்துள்ளார்.சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் ஒரே இடத்தில் அமர்ந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டம் நாளை மதியம் 1 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: