×

மேற்குவங்க அமைச்சரவையில் இருந்து பார்த்தா சட்டர்ஜியை நீக்கினார் மம்தா பானர்ஜி..!!

கொல்கத்தா: மேற்குவங்க அமைச்சரவையில் இருந்து பார்த்தா சட்டர்ஜியை மம்தா பானர்ஜி நீக்கி உள்ளார். மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், தலைநகர் கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா முகர்ஜி கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரையும் 10 நாட்கள் காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் சனிக்கிழமை அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து 26ம் தேதி கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமைச்சர் பார்த்தா, நடிகை அர்பிதாவை அருகருகே அமர வைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தினர். இதனிடையே நேற்று மீண்டும் அப்ரிதா முகர்ஜி வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், மேலும் ரூ.20 கோடியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவரது வீட்டிலிருந்து 20 செல்போன்கள், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, பர்தா சாட்டர்ஜியிடம் அமலாக்கப்பிரிவு நடத்திய விசாரணையில் அவருக்கு எங்கெல்லாம் சொத்துக்கள், வீடுகள் இருப்பது தெரியவந்ததையடுத்து, தெற்கு கொல்கத்தாவில் உள்ள ராஜ்டங்கா பகுதியிலும், பெல்ஹாரியாவிலும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

அங்கு சாட்டர்ஜிக்கு சொந்தமான வீடுகள் பூட்டப்பட்டிருந்ததால், அதை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பூட்டை உடைத்து சென்று ஆய்வுசெய்தனர். இந்த ஆய்வில் கட்டுக்கட்டாக ரூ.28 கோடி ரொக்கப்பணம், நகைகள் ஆகியவற்றை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த 5நாட்களுக்கு முன் சாட்டர்ஜிக்கு சொந்தமான வீட்டில் ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.28 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பல முக்கிய ஆவணங்களையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பார்த்தா சாட்டர்ஜி அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அமைச்சரவையில் இருந்து மம்தா நீக்கினார்.


Tags : Mamata Banerjee ,Partha ,Bengal , West Bengal Cabinet, Partha Chatterjee, Dismissal, Mamata Banerjee
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி