கொணவட்டத்தில் கண்காணிப்பு குழுவினர் நடவடிக்கை தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டியவர் சிக்கினார்: அவர்களை வைத்தே அகற்றி அதிரடி

வேலூர்:  சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டியவர் கண்காணிப்பு குழுவினரிடம் சிக்கினார். பின்னர் போலீசில் புகார் அளித்து அவரைக்கொண்டே குப்பைகளை அகற்றி அதிரடி நடவடிக்கை எடுத்தனர். வேலூர் பகுதிகளில் உள்ள கறிக்கடைகள் உட்பட பல்வேறு இடங்களில் சேரும் குப்பைகளை பலர் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டி வருகின்றனர். குறிப்பாக கொணவட்டம், சதுப்பேரி பகுதிகளில் சர்வீஸ் சாலையோரம் இறைச்சி கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை.எனவே குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க குழு அமைத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சர்வீஸ் சாலையோரம் குப்பை கொட்டுபவர்களை கண்காணித்து பிடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தனி குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கொணவட்டம் பகுதியில் சர்வீஸ் சாலையோரம் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இறைச்சி கழிவுடன் குப்பையை கொண்டு வந்து கொட்டினார். அதைப்பார்த்ததும் கண்காணிப்பு குழுவினர் அவர் மீது வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை அழைத்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கொணவட்டம் பகுதியில் கோழி இறைச்சி வியாபாரம் செய்து வருவதும் அங்கு இறைச்சி கழிவுகளை மூட்டையாக கட்டி கொண்டு வந்து வீசிச்சென்றதும் தெரிய வந்தது.

பின்னர் அந்த நபர் தேசிய நெடுஞ்சாலையோரம் தான் கொட்டிய குப்பைகளை அகற்றி விடுவதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து கொட்டிய குப்பைகளை அந்த நபரை வைத்தே நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் யாராவது குப்பைகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: