ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் புதிய தேர் அமைக்கும் பணி மும்முரம்: 6 மாதத்தில் பணி முடிவடையும்

ஓசூர்: ஓசூர் மரகதாம்பிகை சந்திரசூடேஸ்வரர் கோயிலில் புதிய தேர் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஓசூரில் உள்ள பழமையான மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா மார்ச் மாதத்தில் நடைபெறுகிறது. முதலில் விநாயகர் தேரும், பின்னர் சந்திரசூடேஸ்வரர் தேரும், அதன் பின்னர் மரகதாம்பிகை தேரும் பவனி வரும். இதில் மரகதாம்பிகை தேர் கடந்த சில மாதமாக பழுதாகி இருந்தது. இதை தொடர்ந்து தேரை சீரமைக்கும் பணிகள் ஒருவாரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து தேர் கமிட்டி தலைவர் மனோகரன் கூறியதாவது:மரகதாம்பிகை தேரின் மர சிற்பங்கள் பழுதடைந்ததால், புதியதாக தேரை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 14 அடி அகலம், 14 அடி உயரம் கொண்ட இந்த தேரில் பூத கணங்கள், யாழி, தல வரலாறு சிற்பங்கள், குதிரை, யானை போன்றவை பழமை மாறாமல் செய்யப்பட்டு வருகிறது.

இதனை திருவாரூர் ஆழித்தேர் செய்த ஸ்தபதி இளவரசன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர். இது அலங்காரத்தில் சுமார் 50 அடி உயரம் கொண்டதாக இருக்கும். கோயில் பங்களிப்பு ₹3.69 லட்சத்துடன் சுமார் ₹64 லட்சம் செலவில், தேர் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அறநிலையத்துறை உதவியுடன் தேர் கமிட்டி தலைவர், தேர் கவுண்டர்கள் பங்களிப்புடன் புதிய தேர் செய்யப்பட்டு வருகிறது. 6 மாதத்தில் பணிகள் முடிவடையும். 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்த தேர் பவனி வரவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: