×

தனியார் மருத்துவமனை படுக்கை அறைக்கும் ஜி.எஸ்.டி., வரியால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி: ஒன்றிய அரசு திரும்பபெற எதிர்பார்ப்பு

சேலம்: தனியார் மருத்துவமனை படுக்கை அறைகளுக்கு ஒன்றிய அரசு விதித்துள்ள 5 சதவீதம் ஜிஎஸ்டி, நடுத்தர மக்களுக்கு பெரும் சிரமத்தோடு, கூடுதல் செலவை ஏற்படுத்தும். எனவே இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று மருத்துவ மேம்பாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி ஒன்றிய அரசு ஜிஎஸ்டி என்னும் வரிமுறையை கொண்டு வந்தது. இந்தமுறை அமலுக்கு வந்தபோது, தொடக்கத்தில் 50 சதவீத பொருட்களுக்கு மட்டும்  3, 5, 12, 18, 28 என்ற சதவீதத்தில் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. அப்போது ஜிஎஸ்டிக்கு எதிராக எதிர்க்கட்சியினர், பல்வேறு அமைப்பினர் ஒன்றிய அரசை கண்டித்து பல கட்ட போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நடப்பாண்டு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரிசி, கோதுமை, பருப்பு உள்பட பொருட்களுக்குபுதிதாக ஜிஎஸ்டி விதித்து  அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதில் தனியார் மருத்துவமனை படுக்கை அறைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்வியும், மருத்துவமும் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டிய ஒன்று. ஆனால் சமீபகாலமாக இவை இரண்டும் வணிக நோக்கத்தில் வளர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் புதிய நோய்கள் உருவாகிக் கொண்டிருக்கும் சூழலில் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த 60சதவீதம் மக்கள், தனியார் மருத்துவமனைகளை சிகிச்சைக்கு நாடுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தனியார் மருத்துவமனைகளின் அறைகளுக்கு 5சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பதால் செலவுகள் அதிகரிக்கும். இது மிகவும் வேதனைக்குரிய செயல் என்பது அவர்களின் மனக்குமுறலாக உள்ளது. சொந்தவீடு, சரியான உணவு, போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது உயிர். இதன் காரணமாகவே நோய்வாய்ப்பட்டு ஆபத்தான காலகட்டங்களில் அதனை தக்க வைக்க போராடுகின்றனர். இதற்காகவே படாதபாடு பட்டு, கடன்வாங்கிக் கூட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் நிலவும் காலதாமதம், உடனடி சிகிச்சை கிடைக்காமல் இருப்பது போன்றவை கூட, இதற்கு ஒரு காரணமாக அமைகிறது.

இதனால் இக்கட்டான நேரங்களில் கட்டணத்தை அவர்கள் பார்ப்பதில்லை. சிகிச்சை முடிந்த பிறகே கட்டணத்தை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். இந்நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது மேலும் சிரமத்தோடு, கூடுதல் சுமையை ஏற்படுத்தும். அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைகளை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றுவதற்கும் வழி வகுக்கும் என்கின்றனர் மருத்துவம் சார்ந்த மேம்பாட்டு அமைப்பின் நிர்வாகிகள். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘இன்றைய காலகட்டத்தில் சாதாரண சிகிச்சை முதல் உயர்தர சிகிச்சை வரை பெறுவதற்கு தனியார் மருத்துவமனைகளே மக்களின் முதல் தேர்வாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையும், ஒவ்வொரு விதமாக கட்டணத்தை நிர்ணயிக்கிறது. எந்த சிகிச்சை எவ்வளவு கட்டணம் என்ற விபரத்தை உறுதியாக எந்த தனியார் மருத்துவமனையும் தெரிவிப்பதில்லை. பில் வரும் பார்க்கலாம் என்பது மட்டுமே அவர்கள் சொல்லும் பதிலாக உள்ளது.

கடைசியில் நகைகளை அடகுவைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும் கட்டணம் செலுத்துகின்றனர். இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளின் வசூலுக்கு மேலும் சாதகமாக இருக்கப்போவது தான் 5சதவீதம் ஜிஎஸ்டி. இந்த வரியை சிகிச்சை பெறும் மக்கள் தான் செலுத்த வேண்டும் என்பது தான் பாதகமான அம்சம். ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு ஜிஎஸ்டி குறித்த முழுமையான புரிதல் இதுவரை தெளிவாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படிப்பட்ட சூழலில் ஜிஎஸ்டி என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகள் மேலும் கல்லாகட்டுவதற்கு இந்த அறிவிப்பு வழிவகுக்கும். எனவே மக்களின் கடும் சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டியது மிகவும் அவசியம்,’’ என்றனர்.  

மக்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும்
இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த மருத்துவர் ராஜேஷ் கூறுகையில், ‘‘தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளிலும் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், பெரும்பாலானவர்கள் தனியார் மருத்துவமனைகளையே விரும்பி வருகின்றனர். மருத்துவம் அனைவருக்கும் கிடைக்க கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். ஏற்கனவே மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, தனியார் மருத்துவமனை அறைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி என்பது சாதாரண மக்களை நேரடியாக பாதிக்கும். எனவே இந்த வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்,’’ என்றார்.

காப்பீட்டு திட்டம் இருந்தும் கட்டணம்
தமிழகத்தில் சாலை விபத்துகளில் காயமடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 48 மணி நேரத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் சிகிச்சை பெறுகின்றனர். பின்னர், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் மேல் சிகிச்சை பெறுகின்றனர். தனியார் மருத்துவமனையில் காப்பீட்டு திட்டம் இருந்தால் அங்கேயும், இல்லையென்றால் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறும் மக்களுக்கான செலவை அரசு ஏற்கிறது. தற்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பால், காப்பீட்டு திட்டத்தை தாண்டியும் மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலையும் உருவாகி உள்ளது.


Tags : G. S.S. D.T. ,Union Government , Private hospital bed room Middle people shocked by GST, tax: Expectation of return of Union Govt
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...