×

பராமரிப்பின்றி காடாக மாறிய இறையடிக் கால்வாய் களக்காடு அருகே கிராமங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம்: பொதுமக்கள் பாதிப்பு

களக்காடு:  களக்காடு அருகே இறையடிக் கால்வாய் தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் நீரோட்டம் தடைபட்டு கிராமங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம் நிலவி வருகிறது. நெல்லை மாவட்டம் களக்காடு சுற்று வட்டார பகுதியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இப்பகுதியில் ஓடும் ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் மூலம் கிடைக்கும் தண்ணீர் தான் விவசாயத்தின் மூலாதாரமாக விளங்குகிறது. ஆனால் சமீபகாலமாக களக்காடு பகுதியில் பல்வேறு கால்வாய், குளங்கள் பராமரிப்பின்றி பாழடைந்து கிடப்பதால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. அந்த வகையில் இறையடிக் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால் விவசாயிகள் மட்டுமின்றி கிராம மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.
களக்காடு அருகே மலையடிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இறையடிக்கால்வாய் தொடங்குகிறது. இந்த கால்வாய் மலையடிபுதூர், திருத்துபனை, புதுத்தெரு, கட்டளை, மேலகட்டளை, கீழகட்டளை, செங்களாகுறிச்சி, வடுகச்சிமதில் கிராமங்கள் வழியாக ஓடுகிறது.  இறையடிக் கால்வாய் மூலம் புலியூர்குறிச்சி, வடுகச்சிமதில், திருவரங்கநேரி ஆகிய குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் 700 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

குளங்கள் நிரம்பியதும் உபரிநீர் நம்பியாற்றில் கலக்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இக்கால்வாயில் தண்ணீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடும். திருக்குறுங்குடி பெரியகுளம் நிரம்பி அதன் உபரிநீரும் இக்கால்வாய் வழியாகவே வெளியேறும். அவ்வாறு வெளியேற்றப்படும் போது கால்வாயின் இரு கரைகளையும் தொட்டப்படி காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடும். பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இறையடிக் கால்வாய் நீண்டநாட்களாக தூர் வாராததால் செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி கிடக்கிறது. கால்வாயே தெரியாதவாறு செடிகள் முளைத்து, காடு போல் காட்சி அளிக்கிறது. அமலை செடிகளும் நிறைந்துள்ளன. மேலும் ஆங்காங்கே மண் திட்டுகளும் ஏற்பட்டுள்ளன. மண் திட்டுகளாலும், செடி-கொடிகள் அடர்ந்துள்ளதாலும் கால்வாயில் நீரோட்டம் தடைபட்டு குளங்களுக்கு தண்ணீர் சிக்கல் ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் மழைக்காலங்களில் கால்வாயில் அதிகளவில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் போது, அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கரைகளை உடைத்து கிராமங்களுக்குள் புகும் சூழல் நிலவுகிறது. அவ்வாறு கால்வாய் உடைத்தால் கரையோர கிராமங்கள் நீரில் மூழ்குவதுடன் விலைநிலங்களும் சேதமாகும் என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன் கால்வாயில் அடர்ந்துள்ள புதர்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தஞ்சமடைந்துள்ளன. இவைகள் கால்வாய் கரையோரமுள்ள கிராமங்களில் குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். மேலும் கால்வாயின் கரையில் குப்பைகளும் கொட்டப்படுவதால் சுகாதார கேடும் நிலவுகிறது. கடந்தாண்டு வெள்ள பெருக்கால் இறையடிக்கால் கிராமத்தில் கால்வாய் கரையில் அரிப்பு ஏற்பட்டது. இந்த அரிப்பு இன்னமும் சீர் செய்யப்படவில்லை.

மீண்டும் வெள்ளம் வந்தால் அரிப்பு பெரியதாகி உடைப்பு ஏற்படும். எனவே புதர் மண்டி கிடக்கும் இறையடிக்கால்வாயை சீரமைக்கவும், கரைகளை பலப்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி பொதுப்பணித்துறையினரிடம் கேட்ட  போது, அவர்கள், இறையடிக்கால்வாயில் அளவீடு செய்ய வேண்டியதிருப்பதால்  தூர்வாரும் பணிகள் தாமதமாகி வருகிறது. கால்வாயை அளவீடு செய்தால் தான்  ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்பதை கண்டறிய முடியும். எனவே அளவீடு செய்து,  ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதனையும் சேர்த்து அகற்ற நடவடிக்கை எடுத்து  வருகிறோம்’ என்றனர்.

அச்சத்தின் பிடியில் கிராம மக்கள்
இதுபற்றி செங்களாகுறிச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் கக்கன் கூறுகையில், எங்கள் பகுதியின் பிரதான கால்வாய் இறையடிக்கால்வாய் ஆகும். இப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயரவும், விவசாய தேவைக்கும் முக்கிய நீராதாரமாக இறையடிக்கால்வாய் திகழ்கிறது. கால்வாய் சீரமைக்கப்படாததால் மழைக்காலங்களில் வெள்ளம் வரும் போது கால்வாய் உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகுந்து விடுமோ என்று கரையோரமுள்ள கிராம மக்கள் அச்சத்தின் பிடியில் உள்ளனர். கால்வாயை தூர் வார வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும்  இன்னமும் தூர்வாரப்படவில்லை. எனவே மழை வரும் முன் கால்வாயை தூர் வார வேண்டும்” என்றார். 


Tags : Kalakadu , Theoetic canal which has turned into forest without maintenance Risk of flooding in villages near Kalakadu: Public impact
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...