×

சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்ட நிலையில் கேத்தரின் நீர்வீழ்ச்சி புனரமைக்கப்படுமா?

கோத்தகிரி: கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சி சட்டசபையில் சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய பொலிவுடன் புனரமைக்கப்படுமா? என சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சியானது சுற்றுலா துறை மூலம் அங்கீகரிக்கப்பட்டு வனத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. குஞ்சப்பனை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கேத்தரின் நீர்வீழ்ச்சியானது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்வர். நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா ஸ்தலங்களை கண்டு களித்து விட்டு சமவெளி பகுதிகளுக்கு செல்லும்போது கோத்தகிரி வழியாக சென்று கேத்தரின் நீர்வீழ்ச்சியை ரசித்து செல்வர்.

இந்த கேத்தரின் நீர்வீழ்ச்சியானது, கோர்த்துக்கரையில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவும், அரவேனு பகுதியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவும் பயணம் செய்யக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சமவெளி பகுதிகளில் இருந்து அதிகமாக சுற்றுலா பயணிகள் இங்கு நிலவும் கால நிலையை அனுபவிக்க வருவார்கள்.இங்கு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தங்கள் குடும்பங்களோடு வந்து செல்கின்றனர். இயற்கை அரணாக அமையப்பெற்ற கேத்தரின் நீர்வீழ்ச்சியின் தோற்றம் நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடி வெள்ளையாக இயற்கையை வர்ணிக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது. இங்கு தாழ்வான பகுதியில் உள்ள வாகன நிறுத்தம், மலைகளின் நடுவே அமையப்பெற்ற நீர்வீழ்ச்சியின் காட்சி கோபுரம் ஆகியவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது. கடந்த காலங்களில் கேட்பாரற்று கிடந்த இந்த கேத்தரின் நீர்வீழ்ச்சியானது, தற்போது சுற்றுலா பயணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி வந்து செல்லும் அளவிற்கு வனத்துறை மூலம் பாதுகாப்பு நடைமுறைகள், அடிப்படை வசதிகள், காட்சி கோபுரம், பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் தொல்லையிலிருந்து சுற்றுலா பயணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஏற்றவாறு புனரமைக்கப்பட்டுள்ளது.

கேத்தரின் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியானது மலைப்பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில் இருந்து உருவாகும் மழை நீர் ஊற்றுகள் மூலம் ஒரசோலை, இருப்புக்கள், ஆடத்தொரை, பெப்பேன், அளக்கரை கிராமங்களில் உள்ள சிறு சிறு நீர் ஊற்று மூலம் உற்பத்தியாகும் நீரை கேத்தரின் நீர்வீழ்ச்சிகள் ஒன்றிணைந்து சமவெளி பகுதியில் உள்ள பவானிசாகர் அணையில் கலக்கிறது.கேத்தரின் நீர்வீழ்ச்சியில் நீர்வீழ்ச்சி அமையப்பெற்ற பகுதி மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி வனத்துறை மற்றும் காவல் துறை மூலம் நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று  சுற்றுலாப் பயணிகள் குளிக்கக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இயற்கையின் கொடையில் அமைந்த கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் நிலவும் இயற்கை சீதோஷ்ண கால நிலையை அனுபவிக்க எந்த அளவிற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி இங்கு வந்து செல்கின்றாரோ, அதேபோல் ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவை இனங்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பறவையினங்கள் இங்கு நிலவும் கால நிலைக்கு ஏற்றவாறு தங்களின் இனப்பெருக்கத்திற்காக இடம்விட்டு இடம் பெயர்கின்றன.

இவ்வாறு சிறப்பு மிக்க கேத்தரின் நீர்வீழ்ச்சியை நீலகிரி மாவட்டத்தில் உள்ள புதிய சுற்றுலா ஸ்தலங்களை உருவாக்கும் வகையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியை சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் சட்டசபையில் வனத்துறை அமைச்சர் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.இதனை ஏற்ற தமிழக அரசு, அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதவிர, தமிழ்நாட்டில் உள்ள 23 சதவீதமாக உள்ள வனப்பகுதியை 33.3 சதவீதமாக உருவாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் வனத்துறை அமைச்சரின் கோரிக்கை சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அதற்கான ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கேத்தரின் நீர்வீழ்ச்சி விரைவில் மறுசீரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டு மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு நிலவும் இயற்கை சீதோஷ்ண நிலையை கண்டு கழித்து செல்லும் வகையில் அமையப்பெறும் என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலாப் பயணிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Tags : Catherine Falls , Declared Eco Tourism Centre Will Catherine Falls be rebuilt?
× RELATED கேத்தரின் நீர்வீழ்ச்சியில்...