×

கும்கிக்கு உடல்நலக் குறைவு காட்டு யானைகளை விரட்டும் பணியில் தொய்வு

பந்தலூர்:  பந்தலூர் அருகே குடியிருப்புகளை இடித்து சேதம் செய்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட அழைத்து வரப்பட்ட கும்கி யானைக்கு உடலநலக் குறைவு ஏற்பட்டதால் யானைகளை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பந்தலூர் அருகே தேவாலா வாழவயல் மற்றும் செத்த கொல்லி பகுதியில் கடந்த 22ம் தேதி இரவு 8 வீடுகளை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தது. இந்த யானைகளை வனப்பகுதிக்குள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரி பொதுமக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதைத்தொடர்ந்து, முதுமலை பகுதியில் இருந்து விஜய், கிரி ஆகிய இரண்டு கும்கியானைகளை வரவழைத்து காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக, வனத்துறையினர் குழு அமைத்து 25 வனப்பணியாளர்கள் இப்பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காட்டு யானைகளை விரட்டுவதற்கு அழைத்து வரப்பட்ட கும்கி யானை விஜய்க்கு நேற்று பேதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால், காட்டு யானைகளை விரட்டும் பணியில் கும்கி விஜய்யை ஈடுபடுத்தாமல் ஓய்வெடுக்க வைத்து கால்நடை மருத்துவர் வரவழைத்து விஜய்க்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், கும்கி யானை கிரிக்கும் காலில் சிறு காயம் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் கூறினர்.

இது குறித்து வனச்சரகர் அய்யனார் கூறுகையில்,``இரண்டு கும்கி யானைகளுக்கும் உடல்நிலை சரியானதும் வனப்பணியாளர்களை வைத்து குடியிருப்புகளை சேதம் செய்த காட்டு யானைகளை  காட்டிமட்டம் வனப்பகுதிக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்வோம்’’ என்றார்.



Tags : Kumki , Kumki is ill Slacking off wild elephants
× RELATED 6 கண்களும் ஒரே பார்வை: விமர்சனம்