×

வலங்கைமான் பகுதியில் பெய்த மழையால் சுள்ளன் ஆறு நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் சுள்ளன் ஆறு போதிய தண்ணீர் இன்றி காணப்பட்ட நிலையில் நேற்று சுமார் 11 செ.மீட்டர் அளவு மழை பெய்ததால் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு நிரம்பியதை அடுத்து சுள்ளன் ஆறு பாசன விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சுள்ளன் ஆறானது பொய்கை ஆறு என்ற பெயரோடு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, அகரமாங்குடி அருகே புரசக்குடி என்ற பகுதியில் சிறு வடிவாய்காலாக தோன்றி திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த நரசிங்கமங்கலம் பகுதியில் சுமார் நாற்பத்தி ஐந்து மீட்டர் அகலத்தில் வெட்டாற்றில் முடிவடைகிறது.மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்போது காவிரியின் கிளை நதிகளோடு நேரடியாக இதுவரை இணைப்பு எதுவும் இல்லாத சுள்ளன் ஆற்றிற்கு பாசனத்திற்கு தண்ணீர் வருவது இல்லை. டெல்டா மாவட்டங்களில் காவேரி கோட்டத்தின்கீழ் உள்ள குடமுருட்டி ஆறு, வெண்ணாறு கோட்டத்தின் கீழ் உள்ள வெட்டாறு ஆகியவற்றில் அதிகமாக நீர் வருகின்றபோது பாசனத்திற்குபோக மீதமுள்ள உபரி நீர் சுள்ளான் ஆற்றை நிரப்பும். அல்லது மழைக்காலங்களில் தேவைக்கு அதிகமான உபரி நீர் விவசாயிகளால் விளை நிலங்களில் இருந்து வெளியேற்றும் போது சுள்ளன் ஆறு நிரம்பும்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா, குடவாசல் தாலுக்கா என மூன்று தாலுக்காக்களை சேர்ந்த ஆயிரகணக்கான சுள்ளன் ஆற்று விவசாயிகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் தலைமுறை தலைமுறையாக மேட்டூர் தண்ணீருக்காக காத்திருக்கின்றனர்.சுள்ளன் ஆற்றில் பாபநாசம் ஒன்றியத்தில் புரசக்குடி, நாவலடி, ஓலப்பச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள ரெகுலேட்டர்களும் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட அவிச்சாக்குடி, ஆவூர், குளக்குடி, நரசிங்கமங்கலம் உள்ளிட்ட ரெகுலேட்டர்கள் என 7 ரெகுலேட்டர்கள் பாசனத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அகரமாங்குடி, அவிச்சாகுடி, ஆவூர்-சாளுவம்பேட்டை, கோவிந்தகுடி, வீராணம், மேல நல்லம்பூர், கீழ நல்லம்பூர், குளக்குடி, தொழுவூர், நரசிங்கமங்கலம் காங்கேயநகரம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதியில் ஒரு சில விவசாயிகள் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக மின் மோட்டார்கள் மூலம் மிகமிக குறைந்த அளவே விவசாயம் செய்து வருகின்றனர்.

வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பருவமழை குறைவின் காரணமாக கடந்த எட்டு ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாத நிலையில் கடந்த இரண்டுஆண்டுகாளக டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டு மேட்டூர்அணை முன்கூட்டியே நிரம்பியதை அடுத்து மே மாதம் டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு திறக்கப்ப்பட்டது. அதனையடுத்து டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.இருப்பினும் ஏனைய பாசன ஆறுகளில் தண்ணீர்வரும் நிலையில் அவற்றுடன் நேரடி தொடர்பு ஏற்படாத சுள்ளன் ஆறு போதிய தண்ணீர் இன்றி காணப்பட்டது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் கடந்த சில தினங்களுக்கு முன் வரை மழை பெய்யாததை அடுத்து கடும் வறட்சி நிலவியது. கால்நடைகளுக்கு போதிய மேய்சல் இல்லாமல் போனது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்ச மழையாக வலங்கைமானில் 11.6 செ.மீ அளவு மழை பதிவானது. அதனையடுத்து முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மழை நீரால் நிரம்பியது. கடந்த சில ஆண்டுகளாக சுள்ளன் ஆறு கால தாமதமாக நிரம்பிய நிலையில் தற்போது முன் கூட்டியே நிரம்பிதை அடுத்து சுள்ளன் ஆறு பாசன விவசாயிகள் பெரிதும் மகிழ்சி அடைந்துள்ளனர். இருப்பினும் கோடை சாகுபடியாக பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

சுள்ளன் ஆற்றை  பாசன ஆறுகளுடன் இணைக்க வேண்டும்
மேட்டூர் அணை திறப்பால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வரும்  நிலையில் அதே டெல்டா மாவட்டங்களில் சுள்ளன் ஆறு விவசாயிகள் மட்டும் சாகுபடி  மேற்கொள்ள முடியாமல் வழக்கம்போல் வடகிழக்கு பருவமழைக்காகவும் உபரி  நீருக்காவும் காத்திருந்தனர். டெல்டா மாவட்டங்களில் உள்ள சுள்ளன் ஆற்றை  பாசன ஆறுகளுடன் இணைக்க வேண்டும். சுள்ளன் ஆற்றில் அனைத்து ஆறுகளிலும்  பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது நல்லூர் பகுதியில் குடமுருட்டி  ஆற்றிலிருந்து பிரிந்து வரும் ஆவூர் வாய்க்காலில் காருகுடி பிரிவு  வாய்க்கால் அருகே ரெகுலேட்டர் அமைத்து அந்த வாய்க்கால் மூலம் சுள்ளன்  ஆற்றிற்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும்.

தலைமுறை  தலைமுறையாக பாதிக்கப்பட்டு வரும் சுள்ளன் ஆற்றுப் பகுதியை சேர்ந்த   ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்கும் விதமாக  காவிரியின் கிளை ஆறுகளில் இருந்து சுள்ளன் ஆற்றுக்கு தண்ணீர் திறந்துவிட  பொதுப்பணித்துறை முன்வரவேண்டும் என விவசாயிகள் அரசுக்கு  பல ஆண்டுகளாக   கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Chullan river ,Walangaiman , Chullan river overflows due to heavy rains in Walangaiman area: Farmers happy
× RELATED வலங்கைமான் பள்ளிவாசலில்...