×

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவூற்று வேலப்பர் கோயிலில் புனரமைப்பு பணி தீவிரம்: ஓய்வறைகள் அமைத்து தர பக்தர்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாவூற்று வேலப்பர் கோயில் அமைந்துள்ளது. கண்டமனூர் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோயில் 1960ம் ஆண்டு தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்தது. மாவூற்று வேலப்பர் கோயிலில் இதுவரை 1973ம் ஆண்டு மற்றும் 2002ம் ஆண்டு என 2 முறை மட்டுமே கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 1973ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது வேலப்பர் கோயிலில் முருகன் சிலை மற்றும் மயில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில், வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 20 ஆண்டுகள் ஆன நிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்படாதது பக்தர்கள் மத்தியில் பெறும் வருத்தம் இருந்தது. வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்களும், இந்து அமைப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், தற்போதைய திமுக அரசு பழங்கால இந்து கோயில்களில் கும்பாபிசேகம் நடத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு கோயில்களில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேக புனரமைப்பு பணிக்காக கடந்த மாதம் 10ம் தேதி வேலப்பர் கோயில் வளாகத்தில் விநாயகர் சாமி, மாவூற்று வேலப்பர் சாமி, கருப்பசாமி ஆகிய 3 சாமிகளுகளின் கலசங்களுக்கு சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்று, விமான பாலாலயம் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோயில் புனரமைப்பு பணிகளான கோயில் கோபுரங்களுக்கு வர்ணம் பூசுதல், மலையில் படிக்கட்டுகளை சீரமைத்தல் மலையில் தடுப்பு கம்பிகள் அமைத்தல், கோயில்களில் வர்ணம் பூசுதல், குடிநீர் குழாய் அமைத்தல், கோயிலில் உள்ள நீருற்று குளத்தை தூர்வாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.விரைவில் வேலப்பர் கோயிலில் கும்பாபிசேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த வேலப்பர் கோயிலில் திருவிழா காலங்களை தவிர்த்து, மற்ற நேரங்களிலும் பக்தர்கள் வந்து செல்வதால், நிரந்தர கழிப்பறை வசதி அமைத்து தரவேண்டும். பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு, மண்டபம் அமைத்து தர வேண்டும், கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதால் மழை மற்றும் வெயில் காலங்களில் பக்தர்கள் ஒதுங்குவதற்கு ஓய்வறைகள் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kumbabhishekam ,Mavoortu ,Velapar ,Temple , Ahead of Kumbabhishekam, renovation work in Mavoortu Velapar Temple intensifies: Devotees request to set up rest rooms
× RELATED மாவூற்று வேலப்பர் கோயிலில் குறைவாக...