×

ரூ.10 லட்சம் மதிப்பில் மண்பாண்ட கூடம் : பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியது திமுக அரசு

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, மண்பாண்ட கூடம் புதிய கட்டிடம் கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. பல ஆண்டு கால கோரிக்கை திமுக ஆட்சியில் நிறைவேறியுள்ளதாக தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். குஜிலியம்பாறை சாலையூரில் 15  குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் பரம்பரையாக மண்பானை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி செய்த மண்பாண்ட பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் இத்தொழிலாளர்கள் போதிய வருமானம் இன்றி சிரமப்படுகின்றனர். வாழ்நாள் முழுவதும் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்து, அதனை விற்பனை செய்தால் மட்டுமே சாப்பாடு என பரிதாப நிலையில் தொழிலாளர்கள் உள்ளனர். பானை, அடுப்பு, வடைசட்டி, தண்ணீர்பானை, கலயம், குழம்பு சட்டி உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். இங்குள்ள தொழிலாளர்கள் அவரவர் வீட்டின் வெளியே திறந்த வெளியிலேயே மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்.

 மழை காலங்களில் உற்பத்தி செய்த பொருட்களை பாதுகாக்க முடியாமல் கடும் சிரமம் அடைந்து வந்தனர். இதனால் உற்பத்தி செய்யும் மண்பாண்ட பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு, குடியிருப்பு பகுதியியை ஒட்டியவாறு உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் மண்பாண்டக் கூடம் கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்தவுடன் மண்பாண்ட கூடம் கட்டித்தர வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் செலவில், மண்பாண்ட கூடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியை ஒட்டியவாறு அரசு புறம்போக்கு இடத்தில் 8 மண்பாண்ட கூடம் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. கட்டிடப்பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் திறக்கப்பட்டு தொழிலாளர்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக மண்பாணை தொழில் செய்து வருகிறோம். அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மழை பெய்யும் மாதங்களில் உற்பத்தி செய்த மண்பாண்ட பொருட்களை போதிய இடவசதியின்றி பாதுகாக்க முடியாமல் சிரமம் அடைந்து வந்தோம். இதனால் இங்கு மண்பாண்ட கூடம் கட்டி தர வேண்டும் பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திமுக ஆட்சியில் மண்டபாண்ட கூடம் புதிய கட்டிடம் கட்டி தரப்பட்டுள்ளது. மண்டபாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Tags : DMK government , 10 lakh mud house: The DMK government has fulfilled the demand of many years
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...