×

சர்வதேச செஸ் போட்டிகள் அதன் பிறப்பிடமான தமிழ்நாட்டில் நடைபெறுவது இந்தியாவுக்கே பெருமை: நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து..!!

சென்னை: இன்று தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன. உலகமே உற்றுநோக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. 187 நாடுகளை சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் 356 அணிகள், சதுரங்க ஆட்டத்தில் காய்களை நகர்த்த காத்திருக்கின்றன.

இதற்காக, மாமல்லபுரம் பூஞ்சேரியில் 22 ஆயிரம் சதுர அடியில் ஒரு அரங்கமும், 52 ஆயிரம் சதுர அடியில் மற்றொரு பிரமாண்ட அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பல்வேறு பிரபலங்கள், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். உள் அரங்கில் விளையாடும் விளையாட்டுகளில் நான் மிகவும் விரும்புவது செஸ் என்று ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதேபோல் செஸ் ஒலிம்பியாட் இன்று தொடங்கவுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பதிவில், சர்வதேச செஸ் விளையாட்டு பிறந்த நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது இந்தியாவுக்கே சிறந்த தருணம் என புகழாரம் சூட்டியுள்ளார். செஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் சச்சின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்திய அணி வெற்றி பெறவும் சச்சின் வாழ்த்து கூறியுள்ளார். இதனிடையே செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த தமிழக அரசு அபாரமான பணியை மேற்கொள்கிறது என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்திருக்கிறது. அனைத்து செய்தித்தாள்களிலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தியுள்ளதாகவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : India ,Tamil Nadu ,Rajinikanth ,Sachin Tendulkar , Chess Match, Tamil Nadu, India, Pride, Rajinikanth, Sachin Tendulkar
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...