மாணவி தற்கொலை செய்த கீழச்சேரி பள்ளியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

திருவள்ளுர் மாவட்டம் கீழச்சேரியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட தனியார் பள்ளியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது. திருத்தணியை அடுத்த தெக்கலூர் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கடந்த 25ம் தேதி கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் தற்கொலை வழக்கில் முதற்கட்டமாக, மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி, பின்பு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது.

மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்பு அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மாணவி உயிரிழந்த விடுதியில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்களுடன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்வின் ஜான், அம்மாவட்ட எஸ்.பி. கல்யாண் ஆகியோரும் உள்ளனர். மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் விடுதியின் அறையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அந்த அறையில் மாணவி எவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்?  எவ்வகையில் இச்சம்பவம் நிகழ்ந்தது? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தினர். மேலும், அப்பள்ளியின் விடுதி காப்பாளர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம், முதன்முதலில் இந்த சம்பவத்தை யார் பார்த்தது? இந்த தகவல் எவ்வாறு வெளியே வந்தது? என்பது குறித்தெல்லாம் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பள்ளியில் விசாரணை நிறைவடைந்த பின்பு, மாணவியின் சொந்த ஊரான தெக்கலூரில் சென்று, மாணவியின் பெற்றோரிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்பின், திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியருடன் ஆய்வுகூட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் தெரிவித்தனர்.  

Related Stories: