×

ஆடி அமாவாசையான இன்று மகாமக குளத்தில் தர்ப்பணம் கொடுக்க தடை

கும்பகோணம்: கும்பகோணத்தில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு மகாமககுளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை. செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து விரதமிருந்து வழிபடுவது சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஆடி அமாவாசை நாளன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்பான ஒன்று. தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். அதன்படி, இந்த 2022ம் ஆண்டின் ஆடி அமாவாசை இன்று 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.கும்பகோணத்தில் உள்ள மகாமககுளம் மிகவும் புகழ் பெற்றதாகவும், புராதன சிறப்பு மிக்கதாகவும் விளங்குகிறது. கும்பகோணம் மாநகருக்கு அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த குளத்தை சுற்றி 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 கோயில்கள் உள்ளன.

குளத்துக்குள் உள்ள 21 தீர்த்த கிணறுகள் புனித தன்மை வாய்ந்தவையாகும். இத்தகைய சிறப்பு பெற்ற மகாமககுளத்தில் ஆடி அமாவாசை தினத்தன்று பொதுமக்கள் ஏராளமானோர் முன்னோர்களுக்கு பிடித்த காய்கறிகள் மற்றும் உணவுகளை படைத்தும், எள் நவதானியம் வைத்து யாகம் செய்தும் தர்ப்பணம் கொடுத்து மகாமககுளத்தில் புனித நீராடுவது வழக்கம்.இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மகாமககுளத்தில் எந்தவித விழாக்களும் நடைபெற அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. தற்போது தமிழ்நாடு அரசு முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்தாலும், மீண்டும் கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணத்தால் இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு மகாமககுளத்தில் உள்ள நான்கு வாசல்களில், வடகரையில் உள்ள பவுர்ணமி வாசல் மட்டும் திறக்கப்படும் என்று செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அனுமதி கிடையாது.

பொது மக்கள் நீராடுவது தடை செய்யப்பட்டு தீர்த்தம் தெளித்துக்கொள்ள மட்டும் அனுமதி. பொதுமக்கள் தர்ப்பணம் செய்ய குளத்தை சுற்றியுள்ள கரையை மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம். பொதுமக்களை கட்டுப்படுத்தவும், எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்கவும் ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றார். மேலும் குளத்திற்குள் அனுமதி தடை விதிக்கப்பட்ட விளம்பர பதாகைகள் நான்கு வாசல்களிலும் பொது மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகர் நல அலுவலர் பிரேமா கூறுகையில், கும்பகோணத்தில் மகாமககுளத்தின் நான்கு கரைகளிலும், காவிரிக்கரையை ஒட்டியுள்ள பகவத் படித்துறை, டபீர் படித்துறை, அரசலாறு படித்துறை உள்ளிட்ட இடங்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு கடந்த மூன்று தினங்களாக தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டு விதிகளின்படி பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சானிடைசர் பயன்படுத்தியும் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Tags : Audi Moon ,Mahamaka pool , It is forbidden to offer darpanam in the Mahamaga pond on the new moon day
× RELATED ஆடி அமாவாசையை ஒட்டி நீர்நிலைகளில்...