×

கொரோனா ஊரடங்கில் குடும்பத்திற்காக விமானம் தயாரிப்பு: லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் அசத்தல்...

லண்டன்: உலகையே வீட்டிற்குள் முடக்கிப்போட்ட கொரோனா பேரிடர்காலத்தில் குடும்பதிற்கென பிரத்யேகமாக சிறிய ரக விமானம் ஒன்றை தயாரித்து அசத்தியுள்ளார் லண்டனில் வாழும் இந்திய வம்சாவளி இளைஞர். தாம் தயாரித்த விமானத்தில் மனைவி, மகள்களுடன் தற்போது ஐரோப்பாவில் உற்சாகமாக வலம் வருகிறார். கொரோனா பேரிடர் காலத்தில் சுமார் ஈராண்டுகள் வீட்டிற்குள் முடங்கிய பலரும் யூ டியூப் பார்த்து புது புது உணவுகளை தயாரித்து ருசித்து மகிழ்ந்த போது லண்டனில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் என்பவர் அதே யூ டியூப் உதவியுடன் குடும்பத்திற்காக பிரத்யேகமாக விமானம் ஒன்றை தயாரித்துள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழாவை பூர்விகமாக கொண்ட அவர் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டில் பொறியாளராக பணிபுரிகிறார். கொரோனா ஊரடங்கில் ஆலைகள் முடங்கியதால் கிடைத்த கால அவகாசத்தில் வீட்டிலிருந்த படியே விமான தயாரிப்பு கையேடுகள், யூ டியூப் விடியோக்கள் ஆகியவற்றின் கைக்கொண்டு சிறிய ரக விமானத்தையே அவர் உருவாக்கியுள்ளார்.

பல்வேறு கட்ட தரப்பரிசோதனைகளுக்கு பிறகு முறையான அனுமதி கிடைத்ததும் தாமே தயாரித்த சிறிய ரக விமானத்தில் மனைவி, இரண்டு மகள்களுடன் ஐரோப்பாவை வளம் வர தொடங்கிவிட்டார் பொறியாளர் அசோக். இதுவரை, ஜெர்மனி, ஆஸ்திரிய, செக்குடியரசு ஆகிய நாடுகளை அவர் வளம் வந்துவிட்டார். ஒன்றரையாண்டு கால உழைப்பை கொட்டி சுமார் 1.8 கோடி ரூபாய் செலவில் குடும்பத்திற்காக தனி விமானத்தையே அசோக் உருவாக்கியுள்ளார். தனிப்பட்ட பயணத்திற்கென ஏற்கனவே சிறிய ரக விமானங்கள் இருக்க ஏன் இந்த முயற்சி என்று கேட்ட போது அவை பெரும்பாலும் இரண்டு இருக்கைகள் கொண்டவை என்பதால் மனைவி, இரண்டு மகள்களுடன் ஒன்றாக பயணிப்பதற்காகவே நான்கு இருக்கைகள் கொண்ட விமானத்தை வடிவமைத்ததாக கூறுகிறார் அசோக். இன்று தன் விருப்பப்படி தாமே உருவாக்கிய விமானத்தில் குடும்பத்துடன் ஐரோப்பாவை உற்சாகமாக வலம் வருகிறார் அசோக்.

Tags : Corona lockdown ,London , Corona, Curfew, Flight, London, Indian, Youth, Crazy
× RELATED லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படித்த...