×

உளுந்தூர்பேட்டை அருகே கூடுதல் பேருந்து இயக்கக்கோரி மாணவ, மாணவிகள் சாலை மறியல்..!!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூட்டடிகள்ளக்குறிச்சி மற்றும் ஆரியநத்தம் என்ற கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களை சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் பேருந்துகள் இல்லாததால் கூடுதல் பேருந்து இயக்ககோரி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

பேருந்துகள் குறைவாக இயக்குவதால், பேருந்துகளின் படிகளில் தொங்கிச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பலமுறை கோரிக்கை வைத்தும் மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து இயக்காத நிலையில், இன்று காலை பள்ளி செல்வதற்காக, 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கூட்டடிகள்ளக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்தனர். அப்பொழுது, அவ்வழியே சென்ற அரசு பேருந்து, பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதால், ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் பேருந்தின் முன் ஓடிச் சென்று, மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருநாவலூர் காவல்நிலைய போலீசார் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து இதுபோன்று, பள்ளி செல்லும் காலை நேரங்களிலும், பள்ளி முடியும் மாலை நேரங்களிலும் கூடுதல் பேருந்து இல்லாமல் தங்கள் கிராமங்களுக்கு நடந்தே செல்லும் நிலை உள்ளதாகவும், அதனால் பள்ளி நேரங்களில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் போராட்டத்தால், உளுந்தூர்பேட்டை- சேந்தநாடு சாலையில் சுமார் அரைமணி நேரமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 


Tags : Ulundurpet , Ulundurpet, additional bus, movement, students, road blockade
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...