×

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி!!

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர்.

ஷிகர் தவான் 50 ரன்களை எடுத்த நிலையில் இந்த ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்தது. தவான் 58 ரன்கள் எடுத்திருந்த போது வால்ஷ் பந்துவீச்சில் பூரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். இந்திய அணி 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் போட்டி தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.

நீண்ட நேரம் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் மழை நின்ற பின் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. போட்டி தொடர்ந்த பிறகு இந்திய வீரர்கள் பேட்டிங்கில் அதிரடி காட்டினர். பவுண்டரிகளாக விளாசி வந்த ஷ்ரேயஸ் ஐயர் 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் சுப்மன் கில் சதத்தை நெருங்கி கொண்டிருந்தார்.

இந்திய அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டது. சுப்மன் கில் 98 ரன்களுடன் களத்தில் இருந்தார். மேலும் தொடர்ந்து ஆட்ட நேரம் மழையால் பாதிக்கப்பட்டதால் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனால் டக் ஒர்த் லீவிஸ் விதிப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 35 ஓவர்களில் 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் ,கைல் மேயெர்ஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் கைல் மேயெர்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த ப்ரூக்ஸும் ரன் எதுவும் எடுக்காமல் சிராஜின் அபார பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து பிராண்டன் கிங் சிறப்பாக  விளையாடி ரன்கள் குவித்தார். மறுபுறம் ஷாய் ஹோப் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் நிக்கோலஸ் பூரன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 74  ரன்னாக இருந்த போது பிராண்டன் கிங் 42 ரன்களில் வெளியேறினார். இதை தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர், இறுதியில்  வெஸ்ட் இண்டீஸ் அணி26 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இதனால் 119ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி  வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்  தொடரை 3-0 என இந்திய அணி  கைப்பற்றி சாதனை படைத்தது.

Tags : India ,West ,Indies , India vs West Indies Final ODI: India win big!!
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் பத்துகானிக்கு...