ஆடி அமாவாசை : ஆறுகள், கடல்களில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

திருச்சி: ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் இன்று ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு அமாவாசையிலும், குறிப்பாக, ஆடி, தை, புரட்டாசி ஆகிய 3 மாதங்களில் வரும் அமாவாசைகளில் தங்கள்  முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது ஐதீகம். இன்று ஆடி மாத அமாவாசை என்பதால் திருச்சி காவிரி ஆற்று அம்மாமண்டபம் படித்துறையில் இன்று ஏராளமான பக்தர்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர்.

இன்றைய தினம் திருச்சி மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பல மாநிலங்களிலிருந்தும் தங்களுடைய முன்னோரர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பதற்காக வந்த வண்ணம் உள்ளனர் . பகதர்கள் கூட்டம் அதிகளவில் இருப்பதால் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் அம்மாமண்டபம் படித்துறையில் குவிந்து வருகின்றனர். மேலும், காவிரி ஆற்றில் நீரின் வேகம் சற்று அதிகமாக இருப்பதால், குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் பக்தர்கள் நீராட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கரையோரங்களில் திதி, தர்ப்பணம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக படகு ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று அதிகாலை முதலே பக்தர்களின் வருகையானது அதிகளவில் காணப்பட்டு வருகிறது. இதேபோல், ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கடல்பகுதியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்து வருகின்றனர். இன்று ஆடி அமாவாசை என்பதால் ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து, பின் சுவாமி தரிசனம் செய்தால் அவர்களின் பாவம் நீங்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்த வண்ணம் உள்ளனர்.

இன்று ஏராளமான பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி வழிபட்ட பொழுது, காலை 4 மணி முதல் 7 மணிவரை கனமழை கொட்டி தீர்த்தது. இருப்பினும் பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடையை பிடித்தபடி தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து, கோவிலில் உள்ள 22 புனித தலங்களிலும் நீராடி, பின் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இன்று பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ராமேஸ்வரம் பேருந்து நிலையம்- கோவில் பகுதி வரை அரசு பேருந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திட்டங்குடி, மேலவாசல் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல,சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் மற்றும் குளக்கரைகளிலும், திருவள்ளூர் வீரராக சுவாமி கோவிலும் பக்தர்கள் அதிகாலை முதலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், தாமிரபரணி ஆற்றில் ஏராளமான மக்கள் புனித நீராடினர். மயிலாடுதுறையில் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் பூம்புகார் சங்கமுக தீர்த்தத்தில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். காவிரி ஆறு பாயும் சேலம், திருச்சி, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மக்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். ஈரோடு பவானி கூடுதுறையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். இதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

Related Stories: