தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணத்தில் சலுகை : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!!

டெல்லி : தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண சலுகை வழங்கும் வகையில் மாதாந்திர பயண அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் சுங்க கட்டணம் தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில் தெரிவித்துள்ளதாவது:

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிமுறைகள் 2008-ன்படி, தேசிய நெடுஞ்சாலை, நிரந்தர பாலம், புறவழிச்சாலை அல்லது சுரங்கப்பாதை ஆகியவற்றை அடிக்கடி பயன்படுத்தும் வர்த்தகமில்லாத வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி மாதாந்திர பயண அட்டை பெறும் நாளிலிருந்து 1 மாதத்திற்கு அதிகபட்சமாக 50 முறை அந்த சாலையை பயன்படுத்துவதற்கு மூன்றில் இரண்டு பங்கு கட்டணமே வசூலிக்கப்படுகிறது.  ஆண்டுதோறும் இதற்கான கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டில் இக்கட்டணம் 315 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளிலிருந்து 20 கி.மீ. தொலைவிற்குள் வசிக்கும் வர்த்தகமில்லாத வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்களுக்கு மட்டும் இச்சலுகை அளிக்கப்படுகிறது, என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: