×

ரூ.10 கோடி முதலீடு செய்துள்ள 3 லட்சம் தொழில் முனைவோரிடம் விவரம் கோரி நோட்டீஸ்: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: தங்கள் வருவாய் விவரங்களை முறையாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என 3 லட்சம் தொழில் முனைவோர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப பட்டுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று வணிகவரி இணை ஆணையர்களின் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வு கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி கூறியதாவது: வணிகவரித் துறையின் வரி வசூல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 36% உயர்ந்துள்ளது. பதிவுத்துறை வருவாயும் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. அரசின் மொத்த வருவாயில் 87 சதவீதம் இந்த துறையின் மூலம் தான் கிடைக்கிறது. கடந்த 3 மாத முடிவில் வணிக வரித்துறைக்கு 45,381 கோடி ரூபாய் வருவாயும், பதிவு துறைக்கு 5,527 கோடி ரூபாய் வருவாயும் ஈட்டி உள்ளது.

பதிவு சட்டம் 1908 என்பது இந்திய பதிவு சட்டமாக உள்ள காரணத்தால், அதை திருத்தவே சட்டமன்றம் மூலம் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டு ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, ஒப்புதல் பெறவுள்ளோம். வணிக வரித்துறையில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளோம். பதிவுத் துறையில் இந்த ஆண்டு 16 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளோம். 10 கோடி ரூபாய் வரை முதலீடு போட்டு தொழில் செய்வோர், தங்களது வருவாய் விவரங்களை முறையாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என சுமார் 3 லட்சம் தொழில் முனைவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Tags : Minister ,Murthi , Entrepreneur, Minister Murthy Information, Income Details
× RELATED மின்சாரம் தாக்கி சிறுவன் பலி