மாமல்லபுரம் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர சிற்பக்கலை தூணை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை:  செஸ்  ஒலிம்பியாட் போட்டி  எதிரொலியாக, தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர சிற்பக்கலைத் தூணை முதல்வர்  திறந்து வைத்தார். தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் (பூம்புகார்) கைவினைஞர்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை மேம்படுத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை நுழைவு வாயிலில் ரூ.60 லட்சம் மதிப்பில் 45 அடி உயரத்தில் அழகிய ‘சிற்பக்கலைத் தூண்’ கலைநயமிக்க பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக்கூட்டம் ஆகியவைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டு மாமல்லபுரத்திற்கு வருகை தரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சிற்பக்கலைத் தூணை திறந்து வைத்தார். தொடர்ந்து, போட்டி நடைபெற உள்ள போர் பாயிண்ட் - செரட்டான் ரிசார்ட்டில்  22 ஆயிரம் சதுர அடியில் பழைய அரங்கம், 52 ஆயிரம் சதுர அடியில் புதிய அரங்கம், மீடியா அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, வீரர், வீராங்கனைகள் அமர்ந்து விளையாடும் டேபிளில் அமர்ந்து ஆர்வமாக செஸ் விளையாடினார்.

Related Stories: