நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட ரன்வீர் சிங்குக்கு எதிராக நூதன பிரசாரம்: நடிகை ஆவேசம்

இந்தூர்: தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட ரன்வீர் சிங்குக்கு எதிராக இந்தூர் மக்கள் நூதனமான முறையில் பிரசாரம் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது நிர்வாண போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் கடும் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளார். அவர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குகளும் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகர மக்கள் மிகவும் வித்தியாசமான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் ரன்வீர் சிங்கின் புகைப்படம் ஒட்டிய ஒரு பெட்டியை நகரின் முக்கிய சந்திப்பில் வைத்துள்ளனர்.

அதில், ‘பழைய பயன்படுத்தாத ஆடைகளை இந்த பெட்டியில் பொதுமக்கள் போடலாம்’ என்று தெரிவித்துள்ளனர். அதன்படி பொதுமக்களும் தங்களது பழைய ஆடைகளை அந்த பெட்டிக்குள் போட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரம் என்ற பெயர் பெற்ற இந்தூர் நகரத்தில், இதுபோன்ற மனக் கழிவுகளை (ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம்) அகற்ற வேண்டும். பழைய துணிகளை சேகரித்து அவருக்கு அவருக்கு அனுப்ப உள்ளோம்’ என்று கூறினர்.

இதுதவிர, இந்தூர் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக்கில், ரன்வீர் சிங் தொடர்ந்து ட்ரோல் செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து சக பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் வெளியிட்ட பதிவில், ‘ரன்வீர் மீது வழக்கு பதியப்பட்டிருப்பது முட்டாள்தனம். நாட்டில் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. அநீதி, அடக்குமுறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் ரன்வீரின் புகைப்படங்களுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாம். உங்கள் விருப்பங்களை எங்கள் மீது திணிக்க வேண்டாம். இது தார்மீக பிரச்னையும் அல்ல’ என்று எதிர்ப்பாளர்களை கண்டிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: