சொத்துவரி உயர்த்தப்பட்டது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து பிளாட் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் வரி உயர்த்தப்பட்டது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரான தனக்கு 2022-23ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரி 3,695 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது அரையாண்டிற்கு 7,170 ரூபாயாக உயர்த்தி ஜூன் 28ம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாந கராட்சியின் இந்த நடவடிக்கை சட்டத்திற்கு முரணானது. அதிகார வரம்பை மீறிய செயலாகும்.

மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து தெருக்கள், பகுதிகள் என்று அனைத்திற்கும் ஒரே மாதிரியான சொத்து வரி நிர்ணயித்துள்ளது சட்டவிரோதமானது. எனவே, தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, எந்த முறைப்படி சொத்து வரி கணக்கிடப்பட்டு உயர்த்தப்பட்டது என்ற விவரங்களை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு  நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உரிய விவரங்களை மாநகராட்சி தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, கணக்கீட்டு முறை தெரிந்தால்தான் உயர்த்தப்பட்ட வரி சரியானதா என்பதை கண்டறிய முடியும் என தெரிவித்த நீதிபதி, அதுகுறித்த ஆவணங்களை ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். அதுவரை மனுதாரருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசில் உள்ள உயர்த்தப்பட்ட தொகைக்கு மட்டும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்றும் உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories: