தாம்பரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்ற இருவர் கைதுதாம்பரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்ற இருவர் கைது

தாம்பரம்: தாம்பரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்று வந்த இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தாம்பரம் காவல்ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கு தாம்பரம், சிவானந்தா தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இரண்டு வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தாம்பரம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆணையர் சீனிவாசன் மற்றும் தாம்பரம் காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து அதை 5 கிராம், 10 கிராம் என சிறு சிறு பொட்டலங்களாக போட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தாம்பரம், கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த வினோத் (24), வண்டலூர், கொளப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (29) ஆகிய இருவரும் வாடகைக்கு அறை எடுத்து தங்கி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து அதை அறையில் வைத்து பொட்டலங்களாக மாற்றி தாம்பரம், வண்டலூர், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு உள்பட பல பகுதிகளில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நேற்று தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 20 கிலோ கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரிகளை பிடித்த தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன், தாம்பரம் காவல் ஆய்வாளர் சார்லஸ், உதவி ஆய்வாளர்கள் ராமமூர்த்தி, கார்த்திகேயன் மற்றும் தனிப்படை போலீசாரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பாராட்டி வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது, தாம்பரம் காவல் துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி உடனிருந்தார்.

Related Stories: