×

சரக்கு வாகனங்களுக்கு பதிவுச்சான்று, தகுதி சான்று புதுப்பிப்பதற்கான கட்டண உயர்வை எதிர்த்த வழக்கு: ஒன்றிய- மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சரக்கு வாகனங்களுக்கான பதிவுச்சான்று மற்றும் தகுதிச்சான்று புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தி ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனரக சரக்கு வாகனங்களுக்கான பதிவுச்சான்று மற்றும் தகுதிச்சான்றுகளை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை 1,500 ரூபாயாகவும், நடுத்தர சரக்கு வாகனங்களுக்கான பதிவுச்சான்று மற்றும் தகுதிச்சான்று புதுப்பித்தல் கட்டணத்தை 1,300 ரூபாயாகவும் உயர்த்தி ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் 2021 அக்டோபரில் அறிவிப்பாணை வெளியிட்டது.

இதேபோல பதிவுச்சான்றை புதுப்பிக்க தாமதமாகும் ஒவ்வொரு மாதத்துக்கும் 500 ரூபாயும்,  தகுதிச்சான்று புதுப்பிக்க தாமதத்துக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாயும் கூடுதல் கட்டணமாக  செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சரக்கு வாகன உரிமையாளர்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால்  இதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் குமாரசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், மத்திய அரசின் கட்டண உயர்வு மற்றும் கூடுதல் கட்டண அறிவிப்பு என்பது 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு மட்டும் விதிப்பது முற்றிலும் சட்டவிரோதமானது. கடந்த 2016ம் ஆண்டு இதேபோல கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அனைத்து வாகனங்களுக்கும் பதிவுச்சான்று, தகுதிச் சான்று புதுப்பிக்க ஒரே நடைமுறையை பின்பற்றும் நிலையில் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அதிக கட்டணம் வசூலிப்பது தன்னிச்சையானது. எனவே, இந்த  அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, ஆறு வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்யும்படி, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags : ECtHR ,Union-State Governments , Case against increase in fee for renewal of registration certificate, qualification certificate for goods vehicles: Union-state governments to respond to IC Court order
× RELATED மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்...