×

ஸ்டான்லி மருத்துவமனையில் 19 வயது இளம்பெண், ஆணுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: டீன் தகவல்

தண்டையார்பேட்டை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கல்லீரல் பாதிக்கப்பட்ட இருவருக்கு, மூளைச்சாவு அடைந்தவர்களின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதாக டீன் பாலாஜி தெரிவித்தார். கடந்த 2019ம் ஆண்டு முதல் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட 19 வயது மாணவி ஒருவர், பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி சேர முடியாமல் கல்லீரல் தானத்திற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்  பதிவு செய்து காத்திருந்தார். இதேபோல், 2020ம் ஆண்டு 46 வயது ஆண் ஒருவர் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதால் குடும்பத்தை வழிநடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். அவரும் கல்லீரல் தானம் கேட்டு ஸ்டான்லியில் பதிவு செய்திருந்தார். இவர்கள் இரண்டு பேருக்கும் கடந்த 25, 26 ஆகிய இரண்டு நாட்களில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இருவர் கல்லீரல் தானம் கொடுக்க முன் வந்தனர். இதை தொடர்ந்து, பதிவு செய்த மாணவி மற்றும் ஆணுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இருவரும் தற்போது நலமுடன் உள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவமனை டீன் பாலாஜி கூறியதாவது: 19 வயது பெண்ணும், 46 வயது ஆணும் கல்லீரல் பாதிப்பு காரணமாக கல்லீரல் தானத்திற்காக காத்திருந்தனர். இவர்களுக்கு தானம் தருவதாக சேலம் மாவட்டம் சேத்தமங்கலம் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ஒருவர் கல்லீரல் தானமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. கல்லீரல் அறுவை சிகிச்சை 12 மணி நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஸ்டான்லி மருத்துவ குழுவினர் சேலத்திற்கு சென்று 6 மணி நேரத்தில் அங்கிருந்து கல்லீரலை கொண்டு வந்து கல்லீரல் பேராசிரியர் ஜஸ்வந்த் தலைமையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அதேபோல், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் விபத்து காரணமாக மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் தானமாக வழங்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்த ஒருவருக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தற்போது இருவரும் நலமுடன் உள்ளார்கள். கடந்த மூன்று நாட்களாக மருத்துவ குழுவினர் கல்லீரலை கொண்டு வருவது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்தனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Stanley ,Hospital , 19-year-old female, male liver transplant at Stanley Hospital: Dean information
× RELATED நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி