விமான நிலையத்தில் பரபரப்பு சுங்கத்துறை முதன்மை ஆணையர் திடீர் இடம் மாற்றம்: ஜிஎஸ்டி, கார்கோ உள்பட பல்வேறு பிரிவுகளில் 11 பேருக்கு புது பதவி

சென்னை: சென்னை விமான நிலையம் மற்றும் கார்கோ பிரிவுக்கான சுங்கத்துறை முதன்மை ஆணையர் உதய் பாஸ்கர் திடீர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையராக இருந்ததோடு, விமான நிலைய கார்கோ பிரிவிற்கும் முதன்மை ஆணையராக பொறுப்பு வகித்தார் உதய் பாஸ்கர். தற்போது, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் பயிற்சி நிலைய பொதுமேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உதய் பாஸ்கருக்கு பதிலாக கேரள மாநிலம் கொச்சியில் ஜிஎஸ்டி ஆணையராக இருக்கும் மேத்யூ ஜோல்லி, சென்னை விமான நிலையம், கார்கோவுக்கு புதிய  சுங்கத்துறை முதன்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சென்னை சுங்கத்தீர்ப்பாயம் ஆணையராக இருந்த தர் ரெட்டி, சென்னை துறைமுகம் 3வது பிரிவு சுங்கத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். மும்பை சுங்கத்துறை ஆணையராக இருந்த சுரேஷ்பாபு, சென்னை ஜிஎஸ்டி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை துறைமுகம் சுங்கத்துறை ஆணையர் அகமது உஸ்மானி, மும்பை சுங்கத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி நிதித்துறை தலைமையகத்திலிருந்த தமிழ்வளவன், சென்னை ஜிஎஸ்டி ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொச்சி சுங்கத்துறை தலைமையகத்திலிருந்த முகமது யூசுப், சென்னை ஜிஎஸ்டிக்கும், கவுகாத்தி சுங்கத்துறை அப்பீல் ஆணையர் சக்திவேல், சென்னை சுங்கத்துறை அப்பீல் ஆணையராகவும்,சென்னை சுங்கத்துறை அப்பீல் ஆணையர் யமுனா தேவி,திருப்பதி ஜிஎஸ்டிக்கும், சென்னை சுங்க அதிகாரிகள் பயிற்சி நிலைய ஆணையர் குண்டுராவ் பிரசாத், சென்னை துறைமுகம் சுங்கத்துறை ஆணையராகவும், சென்னை தெற்கு ஜிஎஸ்டி ஆணையர் சுதா சோகா, சேலம் ஜிஎஸ்டி ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையம், கார்கோ பிரிவு, சென்னை துறைமுகம்,ஜிஎஸ்டி வரி பிரிவு,மத்திய வரி தீர்ப்பாயம் ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் 11 உயர் அதிகாரிகள் அதிரடியாக திடீா் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தை பொறுத்தமட்டிலும், சமீப காலமாக  தங்கம், போதை பொருள், வெளிநாட்டு பணம் கடத்தல் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வந்தது. அது மட்டுமின்றி சமீபத்தில் இலங்கையைச் சேர்ந்த 5 பேரிடம் தங்கம் பறிமுதல், அதைத்தொடா்ந்து,அவர்கள் 5 பேரும் ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை விமானநிலையத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது, பெரும் பிரச்னையையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இதற்கிடையே நாடு முழுவதும் சுங்கத்துறை, மத்திய வருவாய் துறை, ஜிஎஸ்டி போன்ற போன்றவைகளில், உயர் பதவிகளில் உள்ள 99 உயர் அதிகாரிகளை ஒட்டு மொத்தமாக ஒரே நாள் இரவில்  மத்திய நிதித்துறை அமைச்சகம்,   இடமாற்றம்  செய்துள்ளது.  அதில் 11 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் தான் சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்று  சுங்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: