×

பொதுச்செயலாளர் பதவி நீக்கம் உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகலா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதிமுகவின் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக  பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, சசிகலா, கட்சியில் பொதுச்செயலாளர் இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ.தேவி, அதிமுக கட்சியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும். இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதில்,  வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன்பு ஆகஸ்ட் இரண்டாவது வாரம் விசாரணைக்கு வர உள்ளது.

Tags : Sasikala ,Law Court ,General Secretary , Impeachment of Secretary General, Court of Law, High Court hearing soon
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா