×

திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி: செப். 27ம்தேதி வருடாந்திர பிரம்மோற்சவம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்டம்பர் 27ம்தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு தோறும் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் காலையிலும், இரவிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் பக்தர்களின்றி நடந்தது.

 இந்தாண்டு பக்தர்கள் தரிசிக்கும் வகையில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 27ம்தேதி தொடங்கி அக்டோபர் 5ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சுவாமியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகளை நேற்று தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர், எஸ்பி பரமேஸ்வர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.அப்போது, முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மாடவீதியில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதனால், பக்தர்கள் அதிகளவில் வர வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. போக்குவரத்து நெருக்கடியின்றி வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்படும். முதற்கட்டமாக பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், பல ஆய்வுக்கு பின்னர் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tirupati ,Annual Brahmotsavam , Devotees allowed in Tirupati after 2 years, Brahmotsavam on 27th, Security arrangements intensified
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு...