டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி குறித்து தவறான கருத்துக்கள் பதிவு செய்தால் நடவடிக்கை பாயும்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடி குறித்து  டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகள் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்ட மாமல்லபுரத்தில் நாளை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க இருக்கிறது. இந்த ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசு ஏற்பாட்டில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, நிகழ்ச்சி மேடைக்கு பிரதமர் மற்றும் முதலவர் வரும் வழிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சர்வதேச வீரர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் அமரும் பகுதிகள், எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அமரும் பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டார். அரங்கம் முழுவதும் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்று அங்கு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வரும் உயர் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சர்வதசே வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வருகையால் விமான நிலையம், அடையார் ஐஎன்எஸ் கடற்கரை தளம், நேரு உள் விளையாட்டு அரங்கம் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் 22 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு பிறகு பிரதமர் தங்கும் ஆளுநர் மாளிகை, அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா என அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் சுற்றினால் அவர்களை பிடித்து விசாரணை நடத்தப்படும். செஸ் விளையாட்டு போட்டி தொடக்க விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடி குறித்து யாரேனும் வாட்ஸ் அப், டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்கள் பதிவு செய்வோர் அல்லது அவதூறு கருத்துக்களை பகிரும் நபர்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். அப்படி ஏதேனும் கருத்துக்கள் பகிர்ந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நிகழ்வுகளை சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: