தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை; விளைநிலங்களில் தண்ணீர் தேக்கம்

சேலம்; தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. அதன்படி சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், வடக்குமுறை, பட்டுத்துறை, அம்மாபாளையம், கல்லாநத்தம், மஞ்சினி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அதைப்போல கிராமப்பகுதியில்  பெய்த மழையால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்தது. பலத்த மழையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ஆடிப்பட்டத்திற்க்கான பயிரிடும் பணி தொடங்க உள்ள நிலையில் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வாடிப்பட்டி பகுதியில் சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த மழையால் பாலமேடு மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அதிகாலையில் பெய்த மிதமான மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

Related Stories: