சென்னை விமான நிலையத்தில் துபாய் செல்லும் விமானத்தில் இயந்திர கோளாறு

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து நேற்றிரவு துபாய் செல்லும் ஏர்இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. உரிய நேரத்தில் கோளாறை விமானி கண்டுபிடித்ததால், 175 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து நேற்றிரவு 9.30 மணியளவில் துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட இருந்தது. இதில் 169 பயணிகள், ஊழியர்கள் உள்பட 175 பேர் பயணம் செய்ய தயார் நிலையில் இருந்தனர். விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு முன், இயந்திரங்களை தலைமை விமானி சரிபார்த்தார். அப்போது விமான இயந்திரத்தில் பெருமளவு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதே நிலையில் விமானம் வானில் பறந்தால் ஆபத்து ஏற்படும் என்பதை விமானி உணர்ந்தார்.

இதனால் அந்த விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், அந்த விமானம் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் விமான பொறியாளர்கள் வந்து, இயந்திர பழுதுகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் நள்ளிரவு 11.30 மணிக்கு மேலாகியும் பழுதுபார்ப்பு பணிகள் முடியவில்லை.இதைத் தொடர்ந்து விமான நிறுவன அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த விமானம் ரத்து என அறிவிக்கப்பட்டது. விமானத்தில் உள்ள இயந்திர பழுதுபார்ப்பு பணிகள் நிறைவு பெற்று, இன்று மாலை விமானம் புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் 169 பயணிகளுக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. பின்னர் அவர்களை வாகனங்களில் ஏற்றி வைத்து, தகவல் தெரிவித்ததும் வாருங்கள் என அனுப்பி வைத்தனர்.இந்த விமானம் ரத்து செய்யப்பட்டதால், இன்று காலை துபாயில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத்தானது. இதனால் சென்னை வரவேண்டிய 170 பயணிகள் துபாயில் தவித்து கொண்டிருக்கின்றனர். 

Related Stories: