×

யூரோ மகளிர் கால்பந்து தொடரின் அரையிறுதியில் ஸ்வீடனை வீழ்த்தியது இங்கிலாந்து

லண்டன்: யூரோ மகளிர் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஸ்வீடனை 4-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியை எதிர்த்து பிரான்ஸ் மோதுகிறது.இங்கிலாந்தில் யூரோ மகளிர் கால்பந்து 2022 தொடர் நடந்து வருகிறது. இதில் 16 நாடுகளின் மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்று ஆடின. லீக் போட்டிகளில் திறமையாக ஆடிய இங்கிலாந்து, ஸ்வீடன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.இதையடுத்து தெற்கு யார்க்‌ஷையரில் உள்ள பிராமல் லேன் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து-ஸ்வீடன் அணிகள் மோதின. இங்கிலாந்து அணி இதுவரை யூரோ மகளிர் கால்பந்து கோப்பையை வென்றதில்லை.

கடந்த 1984 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடந்த யூரோ கோப்பையில் இங்கிலாந்து அணி ரன்னர் கோப்பையை வென்றுள்ளது. இம்முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற துடிப்போடு உள்ள இங்கிலாந்து வீராங்கனைகள், இந்த அரையிறுதிப் போட்டியில் அணியாக இணைந்து அற்புதமான ஆடினர்.போட்டியில் துவக்கத்தில் இருந்தே இங்கிலாந்து வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். பெரும்பாலும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்து, ஸ்வீடன் வீராங்கனைகளை இங்கும் அங்குமாக அலைக்கழித்தனர். நடப்பு யூரோ தொடரில் தொடர்ந்து திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்டர் ஃபார்வர்ட் பெத் மெட், முதல் பாதி ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் அற்புதமாக ஒரு ஃபீல்ட் கோல் அடித்து, இங்கிலாந்தின் கோல் கணக்கை துவக்கி வைத்தார்.

 தொடர்ந்து 48வது நிமிடத்தில் முன்கள வீராங்கனை லூசி பிரான்ஸ், 68வது நிமிடத்தில் ரைட் விங்கில் ஆடிய அலெசியா ரூசோ ஆகியோரும் கிடைத்த வாய்ப்புகளை தவற விடாமல் கச்சிதமாக கோல் அடித்தனர். தொடர்ந்து 76வது நிமிடத்தில் ஃபிரான் கிர்பியும் தன் பங்கிற்கு கோல் அடிக்க, பரபரப்பான இப்போட்டியில் இங்கிலாந்து 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி நடப்பு யூரோ தொடரின் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் இந்த வெற்றியை நாடு முழுவதும் கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பக்கிங்ஹாம்ஷையரில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை (இன்று இரவு 12.30 மணிக்கு) நடைபெறவுள்ள 2வது அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியை எதிர்த்து இத்தாலி மோதுகிறது.

Tags : England ,Sweden ,Euro Women's Football Series , England beat Sweden in the semi-finals of the Euro Women's Football Series
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது