எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 8-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி அடுத்தமாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றம் தொடங்கிய நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் 5% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதேபோல் மாநிலங்களவையும் அமளி ஏற்பட்டதையடுத்து திமுக எம்பிக்கள் உட்பட மொத்தம் 31 எதிர்க்கட்சி எம்பிக்கள் இருஅவைகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் அவைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.  இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  இதனையடுத்து பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் மாநிலங்களவை கூடியபோது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ச்சியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் மீண்டும் கடும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Related Stories: