×

சோழவந்தான் அருகே திட்டமிடாத பாலப் பணிகளால் போக்குவரத்து துண்டிப்பு

*20 கிமீ சுற்றி செல்லும் அவலநிலை

*தற்காலிக சாலை அமைப்பதே தீர்வு

சோழவந்தான் : சோழவந்தான்  அருகே திட்டமிடாத பால பணிகள், மாற்று பாதையின்றி நடந்து வருவதால்  போக்குவரத்து பாதித்துள்ளது. இதனால் வாகனஓட்டிகள் 20 கிமீ வரை சுற்றி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.    சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள்  சுமார் 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் வாடிப்பட்டி  சாலையிலிருந்து நகர் பகுதிக்கு கனரக வாகனங்கள் செல்வதற்காக பசும்பொன்  நகரிலிருந்து முல்லை ஆறு கால்வாய் கரையோரம் பேட்டை வழியாக ஒரு மாற்று  பாதையும், நகரி சாலையிலிருந்து நெடுங்குளம் ரயில்வே கேட், தச்சம்பத்து  வழியாக மற்றொரு மாற்று பாதையும் அறிவிக்கப்பட்டது.

இதில் பொதுப்பணி  துறைக்குரிய முல்லை ஆறு கால்வாய் கரையோர சாலை முற்றிலும் போக்குவரத்துக்கு  வழியின்றி சிதைந்து கிடக்கிறது. இதனால் அரசு போக்குவரத்து கழக  பணிமனையிலிருந்து செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள்,  தச்சம்பத்து வழியாக சுமார் 7 கிமீ சுற்றி சோழவந்தானுக்கு சென்று வந்தன.  இந்நிலையில் இந்த சாலையில் நகரியிலிருந்து நெடுங்குளம் ரயில்வே கேட்  வரையிலுள்ள வாடிப்பட்டி யூனியனுக்குட்பட்ட சாலையில் பழுதடைந்த நான்கு  பாலங்களை இடித்து புதிய பாலங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக  சாலையின் குறுக்கே பெரிய அளவில் பள்ளங்கள் தோண்டியதால் இவ்வழியே  போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து  பொதுமக்கள் கூறுகையில், ‘பொதுவாக இதுபோல் போக்குவரத்துள்ள சாலையில் பாலப்  பணிகள் நடந்தால், அதன் அருகிலேயே மண் நிரப்பி தற்காலிக சாலை அமைப்பது  வழக்கம். ஆனால் இங்கு இத்தகைய மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யாமல் பள்ளம்  தோண்டி போக்குவரத்தை தடை செய்துள்ளனர். இதனால் அரசு பணிமைனையிலிருந்து காலை  ,இரவு சோழவந்தானுக்கு சென்று வரும் பேருந்துகள் சுமார் 20 கி.மீ தூரம்  தேனூர், வாடிப்பட்டி வழியாக சுற்றி வருகிறது.

இதனால் போக்குவரத்து  தொழிலாளர்கள் கூடுதலாக 2 மணிநேரம் பணி செய்வதுடன், டீசல் செலவும்  கூடுகிறது. மேலும் உரிய நேரத்திற்கு பேருந்து வராமல் பொதுமக்கள்  பரிதவிக்கும் நிலை தொடர்கிறது. ஏற்கனவே ரயில்வே மேம்பால பணிகளால்  வாடிப்பட்டி சாலை சேறும் சகதியுமாகி கிடப்பதால் பரிதவித்து வரும்  வாகனஓட்டிகள், தற்போது தச்சம்பத்து சாலையும் அடைக்கப்பட்டதால் கடும்  சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்த சாலை வழியாகத்தான் ரிஷபம்  கிராமத்தினர் மயானத்திற்கு செல்ல வேண்டும். யாராவது இறந்தால் இறுதி ஊர்வலம்  செல்ல கூட வழியில்லாததால் தேவையற்ற பிரச்னைகள் உருவாகும் நிலை உள்ளது.  மேலும் நான்கு வழிச்சாலையில் விபத்து ஏற்படும் சமயத்தில் மதுரை,  திருமங்கலம் உள்ளிட்ட ஊர்களுக்கு இச்சாலை வழியாகத்தான் வாகனங்கள்  திருப்பி  விடப்படும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலையில், சில அதிகாரிகளின்  இதுபோன்ற திட்டமிடாத பணிகளால் அரசுக்கு தான் தேவையற்ற கெட்ட பெயர்  உருவாகும். எனவே புதிய பாலங்கள் கட்டுமிடத்தின் ஓரத்திலேயே தற்காலிக  சாலைகள் அமைத்து வழக்கமான போக்குவரத்து துவங்க மதுரை மாவட்ட கலெக்டர் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Tags : Cholawanthan , Cholavanthan: The unplanned bridge works near Cholavanthan have affected the traffic as there is no alternative route. Thus motorists
× RELATED சோழவந்தான் அருகே களைகட்டிய கிடாய் சண்டை