விருதுநகரில் காரில் பின்தொடர்ந்து புரோக்கரிடம் 16 பவுன் செயினை பட்டப்பகலில் பறித்த கும்பல்

*12 மணி நேரத்தில் பிடித்த போலீசார்

*நகை மீட்பு; பெண் உள்பட 6 பேர் கைது

விருதுநகர் : விருதுநகரில் டூவீலரில் வந்த நிலபுரோக்கரை காரில் பின்தொடர்ந்து வந்து 16 பவுன் தங்கச் செயினை பறித்த கும்பலை, போலீசார் 12 மணி நேரத்தில் பிடித்து நகையை மீட்டனர். இது தொடர்பாக பெண் உள்பட 6 பேரை கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.

விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி (73), நிலத்தரகர். இவர், கை விரல், கை, கழுத்தில் நகைகளை அணிந்து நகைக்கடை போல வலம் வந்துள்ளார். இவர், நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு சாப்பிட டூவீலரில் வந்துள்ளார். இவரை பின்தொடர்ந்து கார் வந்துள்ளது. வீட்டு வாசலில் கந்தசாமி நின்ற போது பின்னால் வந்த காரில் இருந்து முகமூடி அணிந்த நபர் 2 பேர் இறங்கி வந்து, கந்தசாமி கழுத்தில் அணிந்திருந்த 22 பவுன் செயினை பறித்துள்ளனர். இதைப் பார்த்த கந்தசாமி மருமகள் சுமதி ஓடி வந்து அவர்களுடன் போராடினார்.

இதில், சுமதி கையில் செயின் டாலர் மற்றும் கொக்கி சிக்கியது. பாக்கியுள்ள 16 பவுன் நகையுடன் காரில் வந்தவர்கள் தப்பி தலைமறைவாகினர். கார் நம்பரை மறைத்து ஏர்டெல் டிடிஹெச் பிளக்ஸ் ஒட்டியும், பக்கவாட்டில் நூறு ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது தெரிய வந்தது. இது குறித்து ரூரல் போலீசில் கந்தசாமி அளித்த புகாரில் போலீசார், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தேடுதலை துவக்கினர்.

இந்த விசாரணையில், விருதுநகரில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் 3 நாட்களுக்கு முன் காரை வாடகைக்கு எடுத்துள்ள விருதுநகர் தியணைப்பு நிலைய வீரர் திருப்பதி (36), யானைக்குழாய் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (35), சிவகாசி மேட்டுத்தெருவை சேர்ந்த அழகர் (29) ஆகிய மூவர் உட்பட 6 பேர் கந்தசாமியை காரில் பின்தொடர்ந்து வந்ததும், இதில் இரண்டு பேர் இறங்கி செயினை பறித்ததும் தெரிய வந்தது. அவர்களை பிடித்த போலீசார் 16 பவுன் செயினை மீட்டு, கொள்ளைக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் 2ம் நிலை காவலராக பணிபுரியும் திருப்பதி, ஆவல்சூரன்பட்டியில் திருப்பதி வாட்டர் பிளான்ட்ஸ் நடத்தி வருகிறார். இவரிடம் டிரைவராக இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் மூலம் தனியார் டிராவல்ஸில் மூன்று நாட்களுக்கு முன் காரை வாடகைக்கு எடுத்துள்ளார். நடமாடும் நகைக்கடை போல வந்த கந்தசாமியை நோட்டமிட்டு, அவருக்கு பின்னால் காரில் வந்து நேற்று முன்தினம் மதியம் செயினை பறித்துச் சென்றுள்ளனர். பறித்த நகையை திருப்பதிக்கு வேண்டிய கிழக்கு பாண்டியன் காலனியில் வசிக்கும் மகாலட்சுமி என்பவரிடம் கொடுத்துவிட்டு காரில் தப்பி சென்றுள்ளனர்.

சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து சிவகாசியில் பதுங்கியிருந்த திருப்பதி, அழகர், கிருஷ்ணமூர்த்தி, சதீஸ், ஈஸ்வரன் மற்றும் மகாலட்சுமி ஆகிய 6 பேரை பிடித்திருப்பதாகவும், தலைமறைவாக உள்ள கருப்பு என்ற நபரை தேடி வருவதாக தெரிவித்தனர். டிராவல்ஸ் உரிமையாளர் ராஜ்குமாரை அழைத்து விசாரித்து வருகின்றனர். 12 மணி நேரத்தில் வழிப்பறி கொள்ளையர்களை சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.

Related Stories: