விழுப்புரம் அருகே அதிமுக ஆட்சியில் தரமின்றி போட்டதால் சேறும், சகதியுமாக மாறிய தார்சாலை-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். விழுப்புரம் அருகே கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருவாமாத்தூர் ஊராட்சி பொன்.அண்ணாமலை நகரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நகரையொட்டி உள்ளதால் அரசு ஊழியர்கள், அரசியல் பிரமுகர்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த அதிமுக ஆட்சியில் தரமற்ற முறையில் தார்சாலை போடப்பட்டதால் சில மாதங்களிலேயே ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, சிறுவர்கள் சாலையில் செல்லும்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

மழைக்காலங்களில் சேறும், சகதியுமாகவும், கனமழையின் போது அப்பகுதி சாலைகள் மழைநீரில் முழுவதுமாக மூழ்கி பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் அவலநிலையும் உள்ளது. இதனிடையே, பொன்.அண்ணாமலை நகரில் மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசித்து வரும் சாலை கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்டு, சில மாதங்களில் சின்னாபின்னமாகியுள்ளது. இதனால், தற்போது மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

மழைக்காலங்களில் டிராக்டர், படகுகள் மூலம் வீடுகளுக்கு செல்லும் நிலை உள்ளது. கடந்த மழையின் போது, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் டிராக்டரில் தனது வீட்டுக்கு செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. எனவே, மழைக்காலத்துக்கு முன்பு அப்பகுதியில் வடிகால் வாய்க்கால்களை சரிசெய்து, விரைந்து தார்சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், எம்எல்ஏ வசிக்கும் தெருவுக்கே இந்த நிலையா? எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: