×

திருவெண்ணெய்நல்லூர் அருகே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அமில கழிவுகளை சாலையோரங்களில் கொட்டி செல்லும் மர்ம நபர்கள்-நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு கோரிக்கை

திருவெண்ணெய்நல்லூர் : விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மாதம்பட்டு கிராமம், கடலூர்-சித்தூர் சாலையில் ராகவன் வாய்க்கால் அருகில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அமிலக் கழிவுகளை சாலையோரங்களில் இரவு நேரத்தில் கொட்டி செல்கின்றனர். இந்த அமிலங்கள் கொட்டிய இடங்களில் உள்ள தாவரங்கள் மற்றும் மரங்கள் அனைத்தும் பொசுங்கி, சுருங்கி காய்ந்து போய் விட்டன.

மேலும் அந்த அமிலக் கழிவுகள் கொட்டிய இடத்திலிருந்து வழிந்தோடி அருகில் உள்ள ராகவன் வாய்க்காலில் கலந்து நீர்வரத்து நேரங்களில் அனைத்து ஏரிகளுக்கும் சென்று, நீர் மற்றும் விவசாய நிலங்களை பாழாக்கும் அபாயம் உள்ளது. மேலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. அப்போது ஒருவித நெடியுடன் கூடிய துர்நாற்றம் வீசுவதாகவும், அதனால் தலைவலி, வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் போன்ற தொந்தரவுகள் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே மேற்கண்ட அமில கழிவுகளை கொட்டிய இடத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுகாதாரத்துறையை சார்ந்த வல்லுநர்கள் பார்வையிட்டு அவற்றை பரிசோதிக்கவும் மற்றும் கழிவுகளை கொட்டிய மர்மநபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvennaynallur , Thiruvenneynallur : Thiruvenneynallur in Villupuram district is next to Mathapattu village, Raghavan on the Cuddalore-Chittoor road.
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே உயிருக்கு...