எக்காரணத்தை கொண்டும் மாணவர்கள் காலை உணவை தவிர்க்கக்கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு ஊர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; 805 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஓரளவு மீண்டு சென்னையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். தொண்டை பாதிக்கப்பட்டிருந்தாலும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுளேன். கொரோனாவில் இருந்து நான் குணமடைந்தாலும் உடல் சோர்வு சற்று இருக்கத்தான் செய்கிறது. மாணவர்களை பார்க்கும் போது உடல் சோர்வு பறந்து போய்விடுகிறது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; நான் மாணவர்களிடம் உரையாடிய போது 5 பேரிடம் காலை உணவு சாப்பிட்டீர்களா என்று கேட்டேன். அதில் 3 பேர் காலை உணவு சாப்பிடவில்லை என்று கூறினர். நான் கூட கல்லூரிப் பருவத்தில் பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்று சாப்பிடாமல் செல்வேன். யாரும் காலையில் சாப்பிடாமல் வரவே கூடாது. எக்காரணத்தை கொண்டும் மாணவர்கள் காலை உணவை தவிர்க்கக்கூடாது. காலையில் தான் அதிகமாக சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மதியம் குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவர்கள் கூறுவதற்கு மாறாக காலையில் குறைவாகவும், இரவில் அதிகமாகவும் உணவு உட்கொள்கிறோம்.

பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் நேற்று கையெழுத்திட்டுள்ளேன். எதையும் சுறுசுறுப்பாக செய்யக்கூடிய உணர்வு மாணவர்களுக்கு வர வேண்டும். நல்ல உடற்பயிற்சி, நல்ல எண்ணங்களுக்கு சுறுசுறுப்பு என்பது அடிப்படை. நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும், நன்றாக படிக்க வேண்டும். மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனத்தை சிதற விட வேண்டாம் எனவும் மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார்.

Related Stories: