நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை :மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி : நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை என்று ஒன்றிய ஊரக வளச்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வீ நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பினார். அதில் தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட சமத்துவபுரங்களை உருவாக்கி அனைத்து சாதியினரும் சேர்ந்து வாழும் வசதிகளை மாநில அரசு வழங்கி உள்ளது. இந்த நிலையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அவ்வாறான சமத்துவ கிராமங்களை அமைக்கும் திட்டம் ஒன்றிய அரசிடம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய ஒன்றிய அமைச்சர் சாத்வீ நிரஞ்சன் ஜோதி, அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைவதற்காக கிராமப்புறங்களில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன் திட்டத்தின் கீழ் 2 கோடியே 95 லட்சம் வீடுகளை கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இத்திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் சாதி பாகுபாடின்றி வீடுகள் வழங்கப்படுகின்றன என்றும் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் சமமான வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்றும் கூறினார். மேலும் சமத்துவ கிராமங்கள் அமைக்கும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை எனவும் இது தமிழ்நாடு அரசின் முன்முயற்சி எனவும் அவர் பாராட்டினார்.

Related Stories: