×

சிங்கப்பூரில் ஓடி ஒளியவில்லை இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே: அமைச்சர் பரபரப்பு தகவல்

கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் கொந்தளித்தனர். கடந்த 9ம் தேதி போராட்டம் உச்சகட்டத்தை எட்டியதால்,, அதிபர் மாளிகை, அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இதனால், உயிருக்கு பயந்து இலங்கையில் இருந்து குடும்பத்துடன் தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரில் தஞ்சமடைந்து, அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் வாக்கெடுப்பு நடத்தி, புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும், போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் பொது ஊடகத்துறை அமைச்சருமான பண்துலா குணவர்தேனா நேற்று அளித்த பேட்டியில், கோத்தபய தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், ‘முன்னாள் அதிபர் கோத்தபய எங்கும் ஓடி ஒளியவில்லை. அவர் சிங்கப்பூரில் இருந்து விரைவில் நாடு திரும்புவார் என்றே எதிர்பார்க்கிறேன்,’ என்றார். ஆனாலும், கோத்தபய வருகை தொடர்பாக வேறெந்த தகவலையும் அவர் கூறவில்லை.

மேலும், உள்நாட்டு போர் குற்றத்திற்காக கோத்தபயவை கைது செய்ய வேண்டுமென சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரல் கோரிக்கை விடுத்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், கோத்தபயவுக்கு எந்த சிக்கலும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என பண்துலா கூறினார். கோத்தபயவுக்கு தனிப்பட்ட பயணத்திற்காக 14 நாள் குறுகிய கால ‘விசிட் பாஸ்’சை சிங்கப்பூர் அரசு கடந்த 14ம் தேதி வழங்கி உள்ளது. அதன்படி பார்த்தால், நாளையுடன் பயண அனுமதி முடிகிறது. இந்நிலையில், கோத்தபய மீண்டும் இலங்கை திரும்புவார் என அமைச்சரே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* கடுமையான அந்நிய செலாவணி பற்றாக்குறை நிலவுவதால், இன்னும் ஓராண்டுக்கு எரிபொருள் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தொடரும் என இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா கூறி உள்ளார்.

Tags : Gotabaya Rajapaksa ,Sri Lanka ,Singapore , Singapore, Gotabaya Rajapaksa, Minister of Information
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்