சென்னை அருகே புதிய விமான நிலையம் ஒன்றிய அமைச்சருடன் தங்கம் தென்னரசு பேச்சு

புதுடெல்லி: சென்னை அருகேல் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து ஆலோசித்துள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் மீனம்பாக்கம் ஒன்றாகும். இருப்பினும், மக்கள் பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு சென்னை அருகே 2வது சர்வதேச விமான நிலையம் கட்ட ஏதுவான இடத்தை கண்டறியும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது. நான்கு இடங்கள் கண்டறியப்பட்ட நிலையில் பன்னூர், பரந்தூர் ஆகிய 2 இடங்கள் இறுதி செய்யப்பட்டு அதில் ஒன்று தேர்தெடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விமான நிலைய பணிகள் தொடர்பாக டெல்லியில்  விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சந்தித்து பேசினார்.

பின்னர், தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக பேசியுள்ளோம். பரந்தூர், பன்னுர் ஆகிய 2 இடங்களில் விமான நிலையம் அமைக்கலாம் என இடங்கள் இறுதி செய்யப்பட்டது. அதற்கான அனுமதி குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வரிடம் ஆலோசித்த பின்னர் 2 இடங்களில் ஒன்று இறுதி  செய்யப்பட்டு விரைவில் அதற்கான பரிந்துரை ஒன்றிய அமைச்சரிடம்  வழங்கப்படும். இதைத் தொடர்ந்து, புதிய விமான நிலையம் தொடர்பான நடவடிக்கை  விரைந்து செயல்படுத்தப்படும்.

இவைத் தவிர, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு விமான நிலையங்களின் விரிவாக்க பணிகள் குறித்தும் ஆலோசித்து உள்ளோம். மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையிலும், சர்வதேச விமான இயக்கம் குறித்தும் பேசியுள்ளோம். ஏற்கனவே, மதுரை விமான நிலையம் விரிவாக்கம் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. அதற்கு பிறகு 24 மணி நேர செயல்பாடு குறித்து முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவைத்தவிர கரூரில் ஒரு புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உள்ளோம். ஓசூரில் புதிய விமான நிலையம் அமைத்தல், தமிழகத்தில் விமானி பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் ஒன்றிய அமைச்சரிடம் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: