பல்லாவரம் - கவுல்பஜார் சாலையில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை: விரைவில் நடவடிக்கை; அதிகாரி உறுதி

பல்லாவரம்: பல்லாவரத்தில் இருந்து கவுல்பஜார் வழியாக கொளப்பாக்கம் செல்லும் வழியில், அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து மலைபோல் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆறு, குளம், ஏரி ஆகிய நீர்நிலைகளை பாதுகாக்க அரசு பல கோடி செலவில் தூர்வாருதல்,  அகலப்படுத்துதல்  ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்  உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. மேலும், எதிர்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டு,  தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, நீர்வளத்தை காப்பதன் அவசியம் ஆகியவை குறித்தும், மக்களிடையே அரசு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.   

இந்நிலையில், கொளப்பாக்கம் மற்றும் கெருகம்பாக்கம் ஆகிய ஊராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, அந்தந்த ஊராட்சி நிர்வாகம்  முறையாக அப்புறப்படுத்தாமல், அலட்சியமாக அடையாறு ஆற்றின் கரையோரம் மலைபோல் குவித்து வைத்துள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

இத்தனைக்கும் பல்லாவரத்தில் இருந்து கொளப்பாக்கம் வழியாக போரூர் செல்வதற்கு இந்த சாலையே பிரதானமாக உள்ளது. அதுமட்டுமின்றி, அடையாறு ஆற்றின் கரையோரம்  குவித்து வைக்கப்படும் குப்பைகளை, அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் பன்றி, நாய், மாடு போன்ற விலங்குகள் மேய்ந்து வருவதால், குப்பைகளை கிளறி சாலை மட்டுமின்றி, அடையாறு ஆற்றின் உள்ளேயும் வீசுகிறது.

தற்போது ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகரிப்பதால் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருந்து, நோய்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தும் வகையில், மக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி, மக்களின் நலனை காக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே, அலட்சியப் போக்கை கடைபிடித்து வருகிறது. ஒவ்வொரு மழைக்காலமும் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ளம் புகுந்து, சென்னையே மூழ்கியது. கன மழை பெய்தாலும், ஊருக்குள் தண்ணீர் வராமல், மக்களும் வெள்ளத்தில் சிக்காமல் இருக்க நிரந்த தீர்வு காணும் வகையில்  அரசு கடந்த ஆண்டு பல கோடி செலவு செய்து, அடையாறு ஆற்றை ஆழப்படுத்தி, அதன் இரு பக்க கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றி, கரையை பல அடிக்கு உயர்த்தியது.

 இந்தநிலையில், கொளப்பாக்கம் மற்றும் கெருகம்பாக்கம் ஆகிய இரண்டு ஊராட்சிகளின் தொடர் அலட்சிய போக்கால் அடையாறு ஆற்றின் நீர்நிலை மாசுபடுவதுடன், கரை பலவீனமாகி, மழைக்காலங்களில் மீண்டும் ஊருக்குள் வெள்ளம் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆற்றின் கரையை பலப்படுத்த, அரசு செலவு செய்த பல கோடி வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, அடையாறு ஆற்றின் கரையோரம் கொளப்பாக்கம் மற்றும் கெருகம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன் ஏற்கனவே கொட்டி, மலைபோல் குவித்து வைத்துள்ள குப்பைகளையும் முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், குப்பையை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

 மாணவர்கள் அவதி

பல்லாவரத்தில் இருந்து கொளப்பாக்கம் வழியாக போரூர் செல்லும்  கொளப்பாக்கம் பிரதான சாலை உள்ளது.   அத்துடன் இந்த சாலையில் பிரபலமான  தனியார் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.    அதற்காக ஆயிரக்கணகான வாகனகள் இந்த பகுதியில் தினமும் வந்து செல்கின்றன. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கைப்பிடித்தபடி செல்லும் அவல நிலையே ஏற்பட்டுள்ளது.

Related Stories: