பள்ளி விடுதியில் தற்கொலை செய்த பிளஸ் 2 மாணவி சரளா உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தெக்களூர் கொண்டு செல்லப்பட்டது

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசானம். கூலித் தொழிலா. இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா (17), திருவள்ளூர்  மாவட்டம் மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் உள்ள அரசினர் உதவி பெறும் பள்ளியான சாக்ரெட் ஹார்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பள்ளியின் விடுதியில் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் சரளா வகுப்புக்கு வராததால் சக மாணவிகளில் ஒருவர், விடுதிக்கு சென்று பார்த்த போது தனது அறையிலங் மாணவி சரளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் கொடுத்த தகவலின் பேரில் மப்பேடு போலீசார் அரசினர் உதவி பெறும் சாக்ரெட் ஹார்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு டிஎஸ்பி சந்திரதாசன், சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் நேரில் சென்று மாணவியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியின் மரணம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து  திருவள்ளூர் எஸ்பி பெகர்லா செபாஸ் கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர், ஏ.செந்தில்குமார், மற்றும் குழந்தைகள் நல அதிகாரி ஆகியோர் முதல்கட்டமாக நேரில் பள்ளி விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா,    கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் விடுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மாணவிகள் மரணம் தொடர்பான வழக்குகளை காவல் துறை விசாரிக்காமல் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையை அடுத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி தலைமையிலான போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று காலை 8 மணிக்கு பிரேதப் பரிசோதனை ஆரம்பமானது. மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்சன் தலைமையில் மருத்துவர்கள் நாராயண பிரபு, பிரபு, வைர மாலா ஆகிய மருத்துவர்கள் குழுவினர், சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார் முன்னிலையில் முழு வீடியோ பதிவு காட்சிகளுடன் பிரேத பரிசோதனை செய்தனர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய பிரேதப் பரிசோதனை பிற்பகல் 1 மணியளவில் நிறைவடைந்தது. பிரேதப் பரிசோதனையின் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க  ஆயுதப்படை ஐஜி கண்ணன், காஞ்சி சரக டிஐஜி சத்யபிரியா, எஸ் பி  பெகர்லா செபாஸ் கல்யாண் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் மருத்துவமனை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.  

இந்நிலையில் மாணவியின் உறவினர்களை பிரேத பரிசோதனையின் போது  உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.  இதனால் பிரேதப் பரிசோதனை செய்தாலும்,  முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்த பள்ளி நிர்வாகம் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உடலை வாங்க போவதில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்ததால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனைக்கு ஏறகனவே வந்திருந்த திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவன தலைவர் சா.அருணன் ஆகியோர் பள்ளி நிர்வாகத்திடமும், மாணவியின் உறவினர்களிடமும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவி சரளாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரவேண்டும் என மாணவியின் உறவினர்கள் சார்பில் திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் திருத்தணி எம்.எல்.ஏ., எஸ்.சந்திரனிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சரளாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் அரசிடமிருந்து இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என  எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் ஆகியோர் வாய்மொழி உத்திரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை சரளாவின் அண்ணன் சரவணன் மற்றும் தாய் முருகம்மாள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து பிற்பகல் 1 மணியளவில் மாணவி சரளாவின் உடலைக் கொண்டு சென்ற வாகனம் 2 மணி அளவில் மாணவியின் கிராமமான தெக்கலூருக்கு வந்து சேர்ந்தது. அப்போது மாணவியின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் கதறி அழுதனர். மாலை 6 மணிக்கு மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதால் விரைவில் மாணவியின் மரணத்திற்கு தீர்வு கிடைக்கும் என தெரிகிறது.

Related Stories: