×

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறையில் மீண்டும் ஆஜர் சோனியாவிடம் 6 மணி நேரம் விசாரணை: டெல்லியில் ராகுல் காந்தி, எம்பி.க்கள் கைது

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர். டெல்லியில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி  கைது செய்யப்பட்டார். நேஷனல் ஹெரால்டு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. கார்கே, பன்சால், ராகுலிடம் ஏற்கனவே பலமுறை அது சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரான சோனியா காந்தியிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். அன்றைய விசாரணைக்குப் பிறகு, மீண்டும் 25ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி  சோனியாவுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் கொடுத்தனர். ஆனால், நேற்று முன்தினம் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பதவியேற்பு விழா நடைபெற்றதால், 26ம் தேதிக்கு இந்த விசாரணை மாற்றப்பட்டது. அதன்படி. நேற்று காலை 11.45 மணிக்கு டெல்லி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோனியா ஆஜரானார்.

அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, மதிய உணவு இடைவெளிக்காக சோனியா வீட்டுக்கு அனுப்பட்டார். மீண்டும் மாலை 3.30க்கு விசாரணைக்கு ஆஜரானார். மொத்தமாக அவரிடம் 6 மணி நேஅம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நடத்துவதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் எம்பி.க்கள் பேரணியாக ஜனாதிபதி மாளிகையை நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, விஜய் சவுக் பகுதியில் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால், தமிழகத்தைச் சேர்ந்த எம்பி.க்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர், விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த், காஞ்சிபுரம் முன்னாள் எம்பி விஸ்வநாதன் உள்ளிட்ட எம்பி.க்களை போலீசார்  கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். ராகுல் காந்தி மட்டும் தொடர்ந்து அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போராட்டத்தை கைவிடும்படி போலீஸ் அதிகாரிகள் அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அதை அவர் ஏற்க மறுத்ததை தொடர்ந்து, அவரை கைது செய்து கிங்ஸ்வே கேம்ப் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ராகுல் கைதை கண்டித்து டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகம், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதனால், டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவியது. மீண்டும் ஆஜராக உத்தரவு இதற்கிடையே, சோனியா காந்தி இன்று காலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Tags : National Herald ,Enforcement Department ,Ajar Sonia ,Rahul Gandhi ,Delhi , National Herald case, Enforcement Directorate, Sonia Gandhi, Rahul Gandhi arrested
× RELATED ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை..!!