×

பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் எவ்வளவு? ஆசிரியர்கள் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை:  பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை ஆசிரியர்கள் கணக்கெடுக்க வேண்டும் என்று  பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மாநில திட்ட இயக்குனர் சுதன், அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஒன்று முதல் பிளஸ் 2 வரையில் 100 சதவீத மாணவர்கள் சேர்க்கையை உறுதிப்படுத்துவதற்கான செயல்பாட்டின் கீழ், பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளது. அதனால், 100 சதவீத  மாணவர் சேர்க்கையை அடைய நவீன தொழில்நுட்ப உதவியுடன் செல்போன் இணைய உதவிகள் பெரிதும் துணையாக இருக்கிறது.  

இதையடுத்து, 2021-22ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் மூலமாக வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதேபோல இந்த ஆண்டில் எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் உள்ளன. அதன்படி, நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிதலின்படி தொடர்ந்து ஒரு மாணவன் நான்கு வாரம் பள்ளிக்கு வராமல் இருந்தால் அவர்கள் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ளவர்கள் என்று கருதி  அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தரவுப் பட்டியலில் அதற்கான காரணத்தை சேர்க்க வேண்டும். வேறு வட்டாரங்களுக்கு, மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்த குழந்தைகள், பள்ளிகளில் இதுவரை சேராத குழந்தைகள், ஐடிஐ, பாலிடெக்னிக் போன்றவற்றில் சேர்ந்தவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்க தேவையில்லாதவர்கள் என்று பட்டியலிட வேண்டும்.

பிளஸ் 2 முடித்தவர்கள், அதிக வயதை எட்டியவர்கள், ஒரு முறைக்கு மேல் பதிவு செய்யப்பட்டவர்கள், மரணமடைந்தவர்கள் போன்றவர்கள் பள்ளியில் மீண்டும் சேர்க்கத் தேவையில்லாதவர்கள் என்று கருத வேண்டும். பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டியவர்களை பொறுத்தவரையில், அந்த மாணவனின் பெயர் பள்ளியில் மீண்டும் சேர்க்க தேவையில்லாத மாணவர்கள் அல்லது பள்ளியில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். 100 சதவீதம் மாணவர் சேர்க்கைக்காக 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை  பள்ளிகளில் சேர்க்க தனிக் கவனம் செலுத்த வேண்டும். 5, 8, 10 ம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்பில் சேர்க்கப்பட்டுவிட்டதை உறுதி செய்வதின் மூலம் இடைநிற்றலை தவிர்க்கலாம்.

அனைத்து மாணவர்களையும் கண்டுபிடித்து அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் அருகாமை பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும். சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளிக் கட்டணம் கட்டாதது, உடல் நலப் பிரச்னைகள், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள், குழந்தை திருமணம், இடம் பெயர்ந்து வேறு மாவட்டங்களுக்கு, மாநிலங்களுக்கு சென்றது ஆகியவற்றை கண்டுபிடிக்க இயலவில்லை அல்லது தொடர்பு கொள்ள முடியவில்லை போன்ற காரணங்களால்  இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி செயல்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி  மேற்குறிப்பிட்ட ஏப்ரல், மே, அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தி தொடங்க வேண்டும்.

Tags : School Education Department , How much do school students drop out? School Education Department orders to enumerate teachers
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி