இந்த பக்கம் வந்தா கொன்னுபுடுவேன்... இபிஎஸ் ஆதரவாளருக்கு கொலை மிரட்டல் விடும் ஓபிஎஸ் ஆதரவாளர்; சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆடியோ

தேனி: தேனியில் அதிமுக சார்பில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக இபிஎஸ் ஆதரவாளரை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து, கொலை மிரட்டல் விடுத்து, ஓபிஎஸ் ஆதரவாளர் போனில் மிரட்டும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேனியில் அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு இபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள், மாவட்டம் முழுவதும் வாகனங்களை ஏற்பாடு செய்து ஆட்களை கூட்டி வந்தனர். போடியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றியச் செயலாளர் இபிஎஸ் ஆதரவாளர் சற்குணம் வாகனங்களை ஏற்பாடு செய்து ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை ஏற்றி வந்தார்.

இதுதொடர்பாக அவரை, ஓபிஎஸ் ஆதரவாளர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ விவரம் வருமாறு:

ஓபிஎஸ் ஆதரவாளர்: அண்ணே...

இபிஎஸ் ஆதரவாளர் சற்குணம்: கட்சி இப்படி ஆயிடுச்சே...

ஓபிஎஸ் ஆதரவாளர்: ரொம்ப வருத்தமா இருக்கு, தொண்டர்களுக்கு மனசு கஷ்டமா இருக்கு. அண்ணே நம்ம ஊருக்கு வண்டி அனுப்பி இருக்கீங்களா?

சற்குணம்: அங்க யாரும் கேட்கல கேட்டா அனுப்புறோம்.

ஓபிஎஸ் ஆதரவாளர்: ஏண்ணே, எல்லா பயலும் எப்படி எப்படியோ இருக்காங்க. நான் ஓபிஎஸ் காசை பத்து பைசா தின்னது இல்ல, நீங்க வந்து ஓபிஎஸ் காசை எவ்வளவோ தின்னு இருக்கீங்க, விசுவாசம் இல்லாம எப்படின்னே போறீங்க.

சற்குணம்: என்ன பண்ண கட்சி முக்கியம்.

ஓபிஎஸ் ஆதரவாளர்: என்ன கட்சி, ம... (எனத் தொடங்கி அருவருக்கத்தக்க, ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து, போடா வாடா என முன்னாள் ஒன்றியச் செயலாளர் சற்குணத்தை பேசுகிறார். மேலும், போடியை தாண்டி இந்த பக்கம் வந்தால், உன்னை வெளுத்திருவேன், வெட்டருவாளைக் கொண்டு வெட்டி கொன்னுபுடுவேன், எஸ்டேட் வாங்கினது தோட்டம் தொரவு வாங்குனது எல்லாம் ஓபிஎஸ் காசு என்று தாறுமாறாக பேசுகிறார்.

சற்குணம்: ஓபிஎஸ் கொடுத்தாரா, என்ன பேசுற நீ.

ஓபிஎஸ் ஆதரவாளர்: ஏலேய் ஏதாவது பேசினா கொன்னுபுடுவேன், போன வையுடா என்று ஆபாசமான அருவருக்கத்தக்க வகையிலான வார்த்தைகளால் திட்டி தீர்க்கும் வகையில் ஆடியோ உள்ளது. முன்னாள் ஒன்றிய செயலாளரை கொன்று விடுவேன் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் பேசிய இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: