அதிமுக அலுவலகத்தை சூறையாடிய ஓ.பி.எஸ் வீட்டை சூறையாடுவதற்கு எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? தேனி ஆர்ப்பாட்டத்தில் மாஜி அமைச்சர் உதயகுமார் பேச்சு

தேனி: அதிமுக அலுவலகத்தை சூறையாடிய ஓபிஎஸ் வீட்டை சூறையாடுவதற்கு எங்களுக்கு எவ்வளவு நேரமாகும் என்று தேனியில் அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். தேனி பங்களாமேட்டில் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் உதயகுமார், அதிமுக அமைப்புச்  செயலாளர் ஜக்கையன் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் உதயகுமார் பேசியதாவது: அதிமுகவால் மூன்று முறை முதல்வராக்கப்பட்டு பல்வேறு பதவிகளை பெற்ற ஓபிஎஸ், கட்சிக்கு துரோகம் செய்து விட்டார். துரோகத்தின் அடையாளமாக அவர் இருக்கிறார். அதிமுகவினர் கோயிலாக கருதும் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் குண்டர்களை கூட்டி வந்து சூறையாடி விட்டார். அவரது வீட்டை சூறையாட எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? இன்றைக்கு அவர் சிலரை நீக்குவதாக கூறி வருகிறார்.  ஓ.பன்னீர்செல்வம் நீக்குவதாக இருந்தால் கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களில் 4 பேர் தவிர, அனைவரையும் நீக்க வேண்டும்.

அவருடன் இருக்கும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு பதவி அறிவிக்கிறார். இன்னமும் அவரது டிரைவர், வீட்டு சமையலருக்குத்தான் பதவி அறிவிக்க முடியும். அவர் பின்னால் தொண்டர்கள் இல்லை என்பது உறுதியாகி விட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. மதுரை மண்டலத்தில் வெற்றி பெற முடியவில்லை. மதுரை மண்டலத்தில் அதிமுக வெற்றிக்கு ஓ.பன்னீர்செல்வம் முயற்சிக்கவில்லை. அவர் போடியில் மட்டும் இருந்து கொண்டார். ஒரு தொகுதியில் மட்டும் பிரசாரம் செய்பவர் எப்படி தலைவராக இருக்க முடியும்? பக்கத்து மாவட்டமான மதுரைக்கு கூட வந்து பிரசாரம் செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

* ஓபிஎஸ்சின் மகனுக்கு சவால்

ஆர்ப்பாட்டத்தில் உதயகுமார் பேசுகையில், ‘‘ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத், தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்தித்து ஜெயிக்கட்டும். அப்படி ஜெயித்தால் நான் அரசியலில் இருந்தே வெளியேறுகிறேன்’’ என்று சவால் விடுத்தார்.

Related Stories: