×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைப்பு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக காற்றின் ஈரப்பதத்தில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரூ.18 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தினை, நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு, துறை அரசு செயலாளர் சந்தரமோகன், உயர்மட்ட குழு உறுப்பினர் மல்லிகார்ஜூனன் சந்தானகிருஷ்ணன், கோயில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், திருநாவுக்கரசு, மருதமுத்து, கோயில் இணை ஆணையர் காவேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேசியதாவது: இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஒரு முயற்சியாக மயிலாப்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர், துறையின் முதன்மை செயலாளர், கோயில் அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராக இருக்கின்ற மல்லிகார்ஜுனன் சந்தானகிருஷ்ணன் முயற்சியால் மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் காற்றிலிருந்து ஈரப்பதத்தை பெற்று, அதை பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக மாற்றி கோயிலுக்கு வருகின்ற பக்தர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்ற ஒரு இயந்திரத்தை திறந்து வைத்திருக்கின்றோம்.

ஒரு நாளைக்கு 500 லிட்டர் தண்ணீர் இதன் மூலம் உற்பத்தியாகின்றது. உடலுக்கு நல்லதொரு ஆரோக்கியத்தை தருவதாகவும் பாதுகாக்கப்பட்ட குடிநீராகவும் பெறப்படுவதால் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதா இருக்கும். அடுத்ததாக காளிகாம்பாள் கோயிலில் இதுபோன்ற பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை அர்ப்பணிப்பதாக மல்லிகார்ஜுனன் தெரிவித்திருக்கின்றார். இந்த இயந்திரம் தொடர்ந்து நல்ல பயனை தருமானால் முதுநிலை கோயில்கள் அனைத்திலும் இதுபோன்ற இயந்திரத்தை நிறுவ இந்து சமய அறநிலையத்துறை முயற்சி எடுக்கும். சிதம்பரம் நடராஜர் கோயில் நகைகளை சரி பார்ப்பதற்கு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தேதியை தருவதாக கூறி இருக்கின்றார்கள். ஆகவே அவர்கள் கேட்ட நேரத்தை தருவதற்கு இந்து சமய அறநிலையத்துறை முன் வந்திருக்கிறது. அதன் பிறகு அவர்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கின்றதோ அதனை பொறுத்து இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் இருக்கும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு பேசினார்.

Tags : Kapaleeswarar temple ,Mylapore ,Minister ,PK Shekharbabu , Mylapore Kapaleeswarar Temple Inaugurates Drinking Water Machine From Air: Minister PK Shekharbabu
× RELATED பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூர்...