காரைக்குடி, விருதுநகர் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் நவம்பர் வரை நீட்டிப்பு

நெல்லை: காரைக்குடி, விருதுநகர், ராஜபாளையம் வழியாக இயக்கப்பட்டு வரும் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் வரும் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.பயணிகளின் கூட்ட நெரிசலை கணக்கில் கொண்டு எர்ணாகுளம்- வேளாங்கண்ணி- எர்ணாகுளம் (எண்கள்.06035/06036) இடையே வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு, ஞாயிற்றுகிழமை காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும்.

 மறுமார்க்கத்தில் ஞாயிற்று கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கள்கிழமை மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.வேளாங்கண்ணி செல்லும் ரயில் தென்காசிக்கு இரவு 8.13 மணிக்கு வந்து, 8.15 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. மறுமார்க்கமாக எர்ணாகுளம் செல்லும் ரயில் தென்காசியில் காலை 3.50 மணிக்கு வந்துவிட்டு, 3.52 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த ரயிலின் சேவை வரும் 6ம் தேதி நிறைவடையும் நிலையில், பயணிகளின் நலன் கருதி காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்பேரில் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே நீட்டிப்பு செய்துள்ளது.

அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி முதல் நவம்பர் மாதம் 13ம் தேதி வரை இந்த ரயில் வேளாங்கண்ணி- எர்ணாகுளம் மார்க்கத்தில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் வரும் 13ம் தேதி தொடங்கி, நவம்பர் மாதம் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், கடையநல்லூர், தென்காசி மற்றும் கேரள ரயில்நிலையங்களில் நின்று செல்வது குறிப்பிட்டத்தக்கது. இந்த ரயிலில் காலி இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும்.

Related Stories: